Published : 07 Apr 2021 06:35 PM
Last Updated : 07 Apr 2021 06:35 PM
திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பாலிவுட் கலைஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியம் கொடுக்கும் சான்றிதழை ஏற்க முடியவில்லை என்றாலோ, ஏற்க முடியாத அளவுக்குப் படத்தில் மாறுதல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை வழங்க மறுத்தலோ படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுவார்கள்.
1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனி தணிக்கை வாரியத்துடன் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், ஹன்ஸல் மேத்தா, நடிகை ரிச்சா சட்டா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''இது யாரையும் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு. எவ்வளவு தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றத்தை நாடும் சக்தி இருக்கிறது? நீதிமன்றங்களுக்கு சினிமா தொடர்பான வழக்குகளை விசாரிக்க நேரமிருக்கிறதா? திரைத்துறைக்குச் சோகமான நாள். இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன அவசியம் இருக்கிறது?'' என்கிற ரீதியில் இவர்கள் தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.
தனது தயாரிப்பான ’ஹராம்கோர்’, தனது இயக்கத்தில் வெளியான 'உட்தா பஞ்சாப்' உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுக்கு முன் அந்தந்தப் படங்கள் பற்றிய தணிக்கை வாரியத்தின் கருத்தை ஏற்காத அனுராக் காஷ்யப், தீர்ப்பாயத்தை நாடியே தனது பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டார்.
"மத்திய அரசின் இந்த திடீர் முடிவு தயாரிப்பாளர்களை பயமுறுத்தும். ஏனென்றால் அவர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை எவ்வளவு நேரத்தை விழுங்கும் என்பதை நினைத்து பயப்படுவார்கள். துணிச்சலான விஷயங்களைப் பேச இயக்குநர்கள் தயங்குவார்கள். எனக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று அனுராக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT