Published : 06 Apr 2021 08:09 AM
Last Updated : 06 Apr 2021 08:09 AM
சென்னையில் பலத்த பாதுகாப்புடன் ரஜினி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்
முதலில் கட்சித் தொடக்கம் என அரசியலில் தீவிரம் காட்டிய ரஜினி, பின்பு தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலில் களம் காணவில்லை. அதே சமயத்தில் யாருக்கு ஆதரவு என்பதையும் தெரிவிக்கவில்லை.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களிக்க காலையில் 7 மணிக்கு வந்தார் ரஜினி. அப்போது பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருமே ஒன்று கூடினார்கள். இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்றார் ரஜினி.
வாக்குப்பதிவுச் சீட்டு சரிபார்த்து முடித்தவுடன், கையொப்பமிட்டார் ரஜினி. பின்பு வாக்களிக்கும் இயந்திரம் அருகே சென்றார். அப்போது அதை வீடியோ, புகைப்படம் எடுக்க ஒன்று கூடினார்கள். அனைவரையும் பின்னால் போகுமாறும் சைகை காட்டினார் ரஜினி. அனைத்து பக்கங்களிலும் அனைவருமே பின்னால் செல்லும்வரை காத்திருந்தார் ரஜினி.
அதற்குப் பின்பு வாக்களித்துவிட்டு, வாக்களித்த மை வைக்கப்பட்ட விரலை உயர்த்திக் காண்பித்தார். பின்பு காவல்துறையினர் பாதுகாப்பாக அவரை காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT