Published : 01 Apr 2021 03:19 PM
Last Updated : 01 Apr 2021 03:19 PM
குஷ்பு தேர்தலில் நிற்பதற்கான சம்பவம் குறித்து அவரது கணவர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் குஷ்பு. பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகிறார். மனைவிக்கு வாக்கு கேட்டு இயக்குநர் சுந்தர்.சியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இருவரும் ஒன்றாக அல்லாமல் தனித்தனியாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் திமுக தன்னைத் தாக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார் குஷ்பு. இந்தச் சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார்.
பிரச்சாரத்துக்கு இடையே சுந்தர்.சியிடம், "சமீபத்தில் குஷ்பு பிரச்சாரத்தில் 2010-ம் ஆண்டு திமுக தாக்கியதாகக் கூறியிருந்தார். அன்றைக்கு ஹைதராபாத்துக்கு உங்களைக் காண வந்ததாகவும் கூறியிருந்தார். கட்சி ரீதியாகத் தாக்குதல், பின்பும் 4 ஆண்டுகள் திமுகவில் இருந்ததை எல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுந்தர்.சி கூறியிருப்பதாவது:
"ரொம்ப வருத்தமாக இருந்தது. ஒரு கட்சியில் தலைமையை நம்பி அனைவரும் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளில் அந்த நாளும் ஒன்று. ஏனென்றால், ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குத்தான் போயிருந்தார்.
வீட்டில் எனது அம்மா, குஷ்புவின் அம்மா, 2 குழந்தைகள் எல்லாம் தனியாக இருந்தார்கள். அந்தச் சமயத்தில் வீட்டில் கல்லெறியப்பட்டது. குஷ்புவும் நிகழ்ச்சியிலிருந்து கிளம்பும்போது, தகாத வார்த்தைகளால் அவரைப் பேசி செருப்பு வீசப்பட்டது. புடவையைப் பிடித்து இழுத்தது உள்ளிட்ட எத்தனையோ விஷயங்கள் நடந்தன.
அப்போது ஹைதராபாத்தில் நான் பட்ட கஷ்டத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்று தேர்தலில் குஷ்பு நிற்பதற்கு அந்த நாளின் சம்பவம்தான் விதை".
இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT