Published : 31 Mar 2021 07:33 PM
Last Updated : 31 Mar 2021 07:33 PM
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் சில சூப்பர் ஹிட் படங்களையும் சமூகப் பிரச்சினைகளைப் பேசும் கனமான உள்ளடக்கம் கொண்ட படங்களையும் கொடுத்து இந்தத் தலைமுறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இயக்குநர் சுசீந்திரன் இன்று (மார்ச் 31) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
18-ல் தொடங்கிய பயணம்
பழனிக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவரான சுசீந்திரன் பதின்பருவத்திலேயே திரைத் துறையில் இயக்குநராகி சாதிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். 18 வயதில் சென்னைக்கு வந்து உதவி இயக்குநர் வாய்ப்பு தேடத் தொடங்கினார். சபா கைலாஷ், எழில் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 12 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு’. கபடி விளையாட்டை முன்வைத்து கலகலப்பான திரைக்கதையுடன் பிரச்சார நெடியில்லாமல் கிராமங்களில் இருக்கும் சாதி அரசியலைத் தோலுரித்தது இந்தப் படம். விமர்சகர்களின் பாராட்டோடு அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ’வெண்ணிலா கபடி குழு’ வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.
2009-ல் வெளியான இந்தப் படத்தில்தான் இன்றைய முன்னணி இளம் நாயக நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் அறிமுகமானார். அதுவரை சிறிய வேடங்களில் தலைகாட்டிக் கொண்டிருந்த சூரி, இந்தப் படத்தில் பரோட்டா உண்ணும் காட்சியின் மூலம் பெரும் புகழடைந்து முதன்மை நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
வெற்றிகளும் விருதுகளும்
சுசீந்திரன் இதுவரை 14 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய இரண்டாவது படம் ‘நான் மகான் அல்ல’ ஒரு சமூக குற்றத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படம் என்றாலும், அழகான நல்ல குணங்கள்கொண்ட குறும்புக்கார இளைஞனாக நாயகன், அவனது அழகான காதலி, இருவருக்குமிடையிலான இளமைத் துள்ளல் மிக்க காதல் காட்சிகள், குடும்பம், நண்பர்களுடனான கேலி, கிண்டல் வழியே இயல்பான நகைச்சுவை என முற்றிலும் கலகலப்பான பொழுதுபோக்குப் படமாக அமைந்தது. இந்தப் படமும் ரசிகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றதோடு இன்றைய நட்சத்திர நடிகர்களில் ஒருவரான கார்த்தியின் தொடக்கக் காலத்தில் அமைந்த மிக முக்கியமான வெற்றிப் படம் இது.
இப்படி ஒரு கமர்ஷியல் வெற்றிப் படத்துக்குப் பிறகு எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய சிறுகதையை முன்வைத்து ‘அழகர்சாமியின் குதிரை’ என்னும் எளிமையான யதார்த்த திரைப்படத்தை இயக்கினார் சுசீந்திரன். சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி குழு’வில் நகைச்சுவை துணை நடிகராக நடித்த அப்புகுட்டி இதில் கதையின் நாயகனாக நடித்தார். இளையராஜா இசையமைத்தார். ஒரு குதிரைக்காரரை முன்வைத்து கிராமத்து வாழ்க்கையைப் பக்குவத்தோடும் பகடியோடும் பதிவு செய்த இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
எல்லை கடக்கும் ஈர்ப்பின் பிரச்சினைகள்
இப்படி ஒரு மாறுபட்ட யதார்த்த படத்துக்குப் பிறகு முதல் நிலை நட்சத்திரமான விக்ரம் உடன் கைகோத்த சுசீந்திரன் பக்கா மசாலா அம்சங்களுடன் இயக்கிய திரைப்படம் ‘ராஜபாட்டை’. வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குப் பின் சுதாரித்துக்கொண்டு அதிக பிரபலமில்லாத இளம் நடிகர்களை வைத்து நகர்ப்புற இளைஞர்களின் எதிர்பாலின ஈர்ப்பு அளவுக்கு மீறிப் போவதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நேரும் சிக்கல்களையும் சமூக அவலங்களையும் கலகலப்பு அம்சங்கள் நிரம்பிய திரைக்கதையுடன் படமாக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ வணிகரீதியாக வெற்றி பெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது.
காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் சாதி ஆணவக் கொலை செய்யப்படுவது தொடர்பான செய்திகளும் விவாதங்களும் பரபரப்பாகத் திகழ்ந்த காலகட்டத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ காதலுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் இருப்பதாகவும் அதனால் சாதிய உணர்வாளர்களுக்கு ஆதரவான கருத்தை முன்வைப்பதாகவும் இருப்பதாகச் சிலர் குற்றம் சாட்டினர்.
சாதி அரசியலைப் பேசும் துணிச்சல்
சுசீந்திரன் மீதான இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு என்று அவர் அடுத்து இயக்கிய திரைப்படங்கள் நிரூபித்தன. தான் அறிமுகப்படுத்திய நாயகன் விஷ்ணு விஷாலுடன் மீண்டும் கைகோத்து அவர் இயக்கிய ‘ஜீவா’, இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதையும் தேர்வுக் குழுவினர் திறமையைப் புறந்தள்ளி தம்முடைய சாதி ஆட்களையே இந்திய அணிக்குப் பரிந்துரைப்பதே இதற்குக் காரணம் என்பதையும் துணிச்சலாகப் பதிவு செய்த திரைப்படம். இவ்வளவு தீவிரமான விஷயங்களைப் பேசிய இந்தப் படத்திலும் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் போன்ற ஜனரஞ்சக அம்சங்களுக்குக் குறைவில்லை. இந்தப் படம் பொதுச் சமூகத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குப் பின்னால் உள்ள சாதி அரசியல் குறித்த விவாதங்களுக்கு வித்திட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் விஷ்ணு விஷாலுடன் மூன்றாம் முறை கைகோத்த சுசீந்திரன் ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தை இயக்கினார். 1980களில் தமிழக கிராமங்களில் நிலவிய சாதிக் கொடுமைகளை மனதைத் தைக்கும் வகையில் பதிவு செய்தது. ஒடுக்கப்பட்ட சாதியினரின் அனைத்து உரிமைகளும் முடக்கப்படுவதும் உரிமைகளை அடையும் முயற்சிகள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுவதும் கண் முன் நிகழும் காட்சிகள் போல் திரையில் செதுக்கப்பட்டிருந்தன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனான நாயகன் வன்முறையையும் வீராவேசத்தையும் தவிர்த்து கல்வியால் முன்னேறத் துடிப்பவனாகக் காண்பிக்கப்பட்டிருந்தது இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
அனைவருக்கும் பிடித்த ஆக்ஷன்
இவற்றுக்கிடையில் நட்சத்திர நடிகரான விஷாலுடன் இணைந்து ‘பாண்டிய நாடு’, ‘பாயும் புலி’ என இரண்டு ஆக்ஷன் த்ரில்லர் படங்களை இயக்கினார் சுசீந்திரன். இவற்றில் 2013 தீபாவளிக்கு வெளியான ‘பாண்டியநாடு’ மதுரையை மையமாகக் கொண்ட வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும் சுவாரஸ்யமான திரைக்கதை, நம்பகத்தன்மை வாய்ந்த ஆக்ஷன் காட்சிகள், ரசிக்கத்தக்க கதாபாத்திர வடிவமைப்பு, கச்சிதமான நடிகர் தேர்வு, இசை, பாடல்கள், நகைச்சுவை ஆகியவற்றால் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. 2015இல் வெளியான ‘பாயும்புலி’ பரபரப்பும் சஸ்பென்ஸும் நிறைந்த ஆக்ஷன் க்ரைம் திரில்லர்தான் என்றாலும் ஏனோ ரசிகர்களைக் கவரவில்லை.
தோல்விகளால் குறையாத மதிப்பு
’மாவீரன் கிட்டு’வுக்குப் பிறகு சுசீந்திரன் கதை-வசனம் எழுதிய ‘வில் அம்பு, ‘வெண்ணிலா கபடிகுழு 2’, எழுதி இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ’ஜீனியஸ்’, ‘கென்னடி கிளப்’, ‘சாம்பியன்’ எந்த வகையிலும் கவனம் ஈர்க்கவில்லை.
ஆனாலும், அவருடைய திறமைக்குத் திரைத்துறையில் மதிப்பு குறைந்துவிடவில்லை என்பதற்குச் சான்றாக நட்சத்திர நடிகர் சிலம்பரசன் அவருடன் கைகோத்தார். கரோனா பெருந்தொற்றுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிரம்பிய காலகட்டத்தில் மிகக் குறைந்த நாட்களில் தயாராகி 2021 பொங்கல் பண்டிகைக்கு வெளியான ’ஈஸ்வரன்’ காதல், நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் ஆகிய ஜனரஞ்சக அம்சங்களை உள்ளடக்கிய கிராமத்துப் படமாக ரசிகர்களை ஈர்த்து வணிக வெற்றியைப் பெற்றது.
இவை தவிர சுசீந்திரன் இயக்கிய ‘ஏஞ்சலினா’ முடிவடைந்து வெளியாகக் காத்திருக்கிறது. ஜெய் நாயகனாக நடிக்கும் ‘சிவ சிவா’ என்னும் படத்தை தற்போது இயக்கிவருகிறார்.
தன்னுடைய 12 ஆண்டு திரைப் பயணத்தில் ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய கமர்ஷியல் திரைப்படங்கள், சமூக அவலங்களைப் பேசும் கதைக் களங்கள், இவ்விரண்டையும் சரியாகக் கலந்து ரசிகர்களைக் கவரும் உத்தி ஆகியவற்றில் தன்னுடைய திறமையையும் தான் ஒரு சமூக அக்கறை உள்ள படைப்பாளி என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவர் இன்னும் பல சமூகப் பிரச்சினைகளைத் திரையில் பேச வேண்டும், உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்று வணிக மதிப்பில் உயர வேண்டும் மென்மேலும் பல வெற்றிப் படங்களையும் விருதுகளையும் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT