Published : 30 Mar 2021 09:26 PM
Last Updated : 30 Mar 2021 09:26 PM
'கோடியில் ஒருவன்' திரைப்படத்தில் வெளியான 'நான் வருவேன்' திரைப்படப் பாடல் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலின் மூலம் தேர்தல் நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி.
'அண்ணாதுரை' படப் பாடல்கள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் பாடலாசிரியர் அருண் பாரதி. 'களவாணி 2', 'சண்டக்கோழி 2', 'கபடதாரி' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். 'விஸ்வாசம்' படத்தில் இவர் எழுதிய டங்கா டங்கா பாடலுக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'கோடியில் ஒருவன்' படத்தில் நான் வருவேன் என்ற பாடலை அருண் பாரதி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ஹரிசரண் பாடியுள்ளார்.
இப்பாடல் சமீபத்தில் யூடியூபில் வெளியான நிலையில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்தப் பாடல் தங்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தருவதாகக் கூறி அருண் பாரதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் என்பதால் பல அரசியல் கட்சிகளும் பிரச்சார மேடைகளில் இதைத் தங்களுக்கான பாடலாகத் தொடர்புபடுத்தி ஒலிக்க விடுகின்றன.
இதுகுறித்து பாடலாசிரியர் அருண் பாரதி கூறும்பொழுது, ''நான் வருவேன் பாடலை இளைஞர்கள் தங்களுக்கான ஊக்க வரிகளாக எடுத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நல்ல கருத்துள்ள பாடல்களைத் தொடர்ந்து எழுதுவதே என் நோக்கம்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
'பிச்சைக்காரன் 2', 'காக்கி', 'கடமையைச் செய்', 'நா நா' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு அருண் பாரதி பாடல்கள் எழுதி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT