Published : 29 Mar 2021 08:07 PM
Last Updated : 29 Mar 2021 08:07 PM
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்கள் அடைந்த வெற்றியால், தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'விக்ரம்' படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனித்து வந்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு கரோனா தொற்று இன்று உறுதியானது. இதனை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
லோகேஷ் வெளியிட்ட செய்தியில், ''என் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு தகவல. எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்வேன். விரைவில் இன்னும் பலத்துடன், திடத்துடன் வருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் இணைந்து கேக் வெட்டி லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திரையுலக நண்பர்கள் அவர் விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT