Published : 27 Mar 2021 04:18 PM
Last Updated : 27 Mar 2021 04:18 PM
'ரங்கஸ்தலம்' திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழ் ரீமேக்கின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கில் 2018-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ரங்கஸ்தலம்'. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ராம்சரண், சமந்தா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ஆதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார்.
2018-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது 'ரங்கஸ்தலம்'. சிறந்த ஆடியோகிராபி என்ற பிரிவில் தேசிய விருதும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது. இந்தப் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
தொடர்ந்து இதன் தமிழ் ரீமேக்கை லிங்குசாமி இயக்குவார் என்றும், லாரன்ஸ் நாயகனாக நடிப்பார் என்றும் செய்திகள் வந்தன. 2019ஆம் ஆண்டு வந்த இந்தத் தகவலுக்குப் பிறகு 'ரங்கஸ்தலம்' தமிழ் ரீமேக் குறித்துப் பெரிய அளவில் செய்திகள் வரவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை அன்று, 'ரங்கஸ்தலம்' நாயகன் ராம்சரண் தேஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், எண்ணற்ற ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 'ரங்கஸ்தலம்' திரைப்படத்தை வரும் மே மாதம் தமிழில் மொழி மாற்றம் செய்து திரையரங்கில் வெளியிடவிருக்கிறோம் என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Wishing our Mega Power Star a great day! #HappyBirthdayRamcharan
Due to Popular demand by all #RamCharan Tamil Fans.. We are releasing Blockbuster Rangasthalam (Tamil) in Theatres this MAY 2021.. Release thru @7GfilmsSiva@AlwaysRamCharan @Samanthaprabhu2 @ThisIsDSP @aryasukku pic.twitter.com/TIaYiZtgH5— Mythri Movie Makers (@MythriOfficial) March 27, 2021
டப்பிங் பதிப்பு வெளியாகவுள்ள நிலையில் இனியும் ரீமேக் செய்வது சாத்தியமில்லை என்பதால் 'ரங்கஸ்தலம்’ தமிழ் ரீமேக் கைவிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT