Published : 23 Mar 2021 11:17 AM
Last Updated : 23 Mar 2021 11:17 AM
நேற்று (22.03.21) 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீண்ட வருடங்களால காத்துக் கொண்டிருந்த ஒரு விருது கிடைத்துள்ளது. 1990ஆம் ஆண்டு புதிய பாதை படத்துக்காக ஒரு விருது, அதன் பிறகு 2000ஆம் ஆண்டு ஹவுஸ்புல் படத்துக்கு ஒரு விருது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காத்திருத்தல் மட்டுமே. அதன் பிறகு தற்போது 2021ஆம் ஆண்டு ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சினிமாவில் நாம் இருப்பதற்கான ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நினைத்து உருவான இந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இது அளவிட முடியாத ஒரு மகிழ்ச்சி. என் போன்ற கலைஞர்களுக்கு இது போன்ற விருதுகள் எப்படிப்பட்ட சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கிறது என்பதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்திய அரசுக்கும், விருதுக் குழுவினர் அனைவருக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன். இந்த படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் கிடைக்கவேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.
இது ஒரு பேராசை என்று கூட சொல்லலாம். அதற்கான மிகச் சிறந்த உழைப்பு அப்படத்தில் இருந்தது. திரைக்கதை, வசனம் என இதுவரைக்கும் யாருமே செய்யாத புதிய யுக்திகளை அப்படத்தில் முயற்சித்திருந்தேன். தனித்தனி விருதாக கொடுக்காமல் ஒட்டுமொத்தமாக சிறந்த ஜூரி விருது கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்குமே என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது அடுத்ததாக ‘இரவின் நிழல்’ என்று ஒரு படம் எடுக்கப் போகிறேன். இதை உலகத்தின் முதல் படம் என்று சொல்லலாம். எத்தனையோ சிங்கிள் ஷாட் படமாக இருந்தாலும் இந்தப் படம் உலகத்தின் முதல் படம் என்பது படம் வரும்போது புரியும். அந்த படத்தை பல கோடி செலவில் அதிக உழைப்பை கொடுத்து உருவாக்க இருக்கிறேன். அதற்கான உத்வேகமாக இந்த விருதை நான் எடுத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT