Published : 22 Mar 2021 10:40 PM
Last Updated : 22 Mar 2021 10:40 PM

'ராட்சசன்' கொடுத்த தன்னம்பிக்கை: விஷ்ணு விஷால் பகிர்வு

சென்னை

'ராட்சசன்' கொடுத்த தன்னம்பிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டார்

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படத்தின் வெளியீடு, ஓராண்டுக்குப் பிறகு மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம்.

'காடன்' படத்தை விளம்பரப்படுத்த விஷ்ணு விஷால் இன்று (மார்ச் 22) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் கரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர்கள் சம்பளம் குறைப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"'ராட்சசன்' படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது.

படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காகப் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக 'ராட்சசன்' படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் என்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.

'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ’ராட்சசன்’ படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.

திரை உலகைப் பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரைக் கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்கக் காலகட்ட பயணம் இருந்தது. 'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x