Published : 21 Mar 2021 02:24 PM
Last Updated : 21 Mar 2021 02:24 PM
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி காப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசி நடிகர் அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு தடுப்பூசி மருந்தைப் போட்டுக் கொண்ட அனுபம் கேர், இந்தக் காணொலியில் தொடர்ந்து கோவிட் தொற்று பரவி வருவதாகவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது தேசம் கோவிட் தொற்றை நன்றாகச் சமாளித்துள்ளது. தற்போது புதிய அலை வருகிறது. பலர் பாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. நமது பொருளாதாரம் முன்னேற வேண்டும், மக்கள் சரியாக வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.
தடுப்பூசி வந்துவிட்டது. ஆனால், முகக்கவசம் இல்லாமல், கூட்டமாக இருக்கும் இடங்களில் சமூக இடைவெளி பேணாமல் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். அதைச் செய்ய வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
அரசின் அத்தனை விதிமுறைகளையும், அறிவுறுத்தலையும் மக்களாகிய நாம் பின்பற்றுவோம் என்று ஒரு பொறுப்பான குடிமகனாக உங்களை வேண்டிக் கேட்கிறேன். எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை விலை மதிப்பற்றது. உங்களையும், உங்கள் நண்பர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என்று அனுபம் கேர் பேசியுள்ளார்.
மேலும், "ஒரு வேண்டுகோள். கரோனா நோயாளிகள் எண்ணிக்கை புதிதாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி வந்துவிட்டாலும் அலட்சியம் வேண்டாம். பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணுங்கள். முகக்கவசம் அணியுங்கள். கூட்டமான இடங்களைத் தவிருங்கள். சமூக இடைவெளி பேணுங்கள். கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி தெளித்து சுற்றுப்புறத்தைத் துப்புரவாக்குங்கள்" என்று குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT