Published : 08 Mar 2021 11:19 AM
Last Updated : 08 Mar 2021 11:19 AM
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இயக்குநரின் ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை உருவாகியுள்ளது.
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே தற்போது இயக்குநர் ரோகாந்த் பதிவால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்பார்ந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கு, மன்னிக்கவும். இதுவரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் பற்றிய அத்தனை அப்டேட்டுகளையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீஸர் வெளிவருவது சம்பந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீஸரையோ நான் எனது முகநூல் பக்கத்தில் வெளியிடவில்லை.
அதற்கு மிக முக்கியமான காரணம், நான் இயக்கிய படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்துக்கான டீஸர் வெளிவருகிறது என்று எனக்குத் தெரியாது. கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீஸருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நான் அந்த டீஸர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன்.
திரும்பவும் மன்னிக்கவும்.
நான் வேறு வழியில்லாமல் அந்த டீஸரைப் பற்றிப் பேசாமல் மௌனமாகக் கடந்து போகிறேன்.
உண்மையில் இந்தப் படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய நான் கட் பண்ணிய டீஸர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல், பின்னணி இசை செய்யப்படாமல், டி.ஐ. செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது.
இந்தக் குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் என்னவென்று தயாரிப்புத் தரப்பில் கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முகநூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்".
இவ்வாறு இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT