Published : 06 Mar 2021 08:55 AM
Last Updated : 06 Mar 2021 08:55 AM
'மாஸ்டர்' திரைப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்தின் முன்கதையை வைத்துப் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கருத்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் வெளியான நாளிலிருந்து பல பிரபலங்கள் இப்படம் பற்றிய தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது துருவங்கள் பதினாறு, நரகாசுரன், மாஃபியா திரைப்படங்களின் இயக்குநர் கார்த்திக் நரேன் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
"ஜேடி கதாபாத்திரத்தை வெறும் குடிகாரன் என்று எளிதில் அடையாளப்படுத்திவிடலாம். ஆனால் உண்மையில் அவர் தன்னுடைய அதிர்ச்சிகரமான கடந்த காலம் மற்றும் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் இருக்கும் ஓர் உடைந்த நபரே. (அந்த கடந்தகாலம் என்ன என்பது விசேஷமான தகவல்)
அந்த கதாபாத்திரம் வேண்டுமென்றே தவிர்த்து வந்த நிகழ்கால வாழ்க்கைக்கு அவர் திரும்பி வர, மிக மோசமாக மனதை பாதிக்கும் ஒரு விஷயம் தேவைபப்டுகிறது. (அது நாள் வரை அவரது வாழ்க்கையில் இல்லாத ஒரு உந்துதல் அது)
ஏனென்றால் நம்மில் பெரும்பான்மையானவர்கள் நமது சொந்த உலகத்தில் தான் வாழ்வோம். கண்டிப்பாக சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று. லோகேஷ் கனகராஜ் அண்ணா, இன்னும் பல ஜேடிக்களை உருவாக்குங்கள்
அப்பாவி ஜான் துரைராஜுக்கும் அவரது மாஸ்டர் விசி செல்வத்துக்கும் இடையிலான பந்தம், ஒருவர் இறப்பதால் இன்னொருவர் அதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டு, அவரது மாஸான மாற்றம் என்று ஒரு முன் கதையை வைத்துப் படம் எடுத்தால் அட்டகாசமாக இருக்கும் இல்லையா? வாழ்க்கை எனும் வட்டம் !!" என்று கார்த்திக் நரேன் பகிர்ந்துள்ளார். கார்த்திக் நரேனின் இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT