Published : 05 Mar 2021 09:54 PM
Last Updated : 05 Mar 2021 09:54 PM
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அவர் நடத்தி வந்த ஃபேண்டம் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டாளிகள், நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவை அனைத்தும் ஃபேண்டம் ஃபிலிம்ஸ், அனுராக் காஷ்யப், டாப்ஸி, விகாஸ் பல், மது மண்டேனா, க்வான் என்கிற திறன் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் தொடர்புடைய இடங்களாகும்.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியுட்டுள்ள அறிக்கையில், "இந்த சோதனையின் போது, உண்மையான வசூலை மறைத்து மிகப்பெரிய அளவில் பண மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக் முறையற்ற பணத்துக்கான கணக்குகளை பற்றி நிறுவன அதிகாரிகளால் விளக்க முடியவில்லை. டாப்ஸியின் இடத்தில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்காள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 7 வங்கி லாக்கர்கள் பற்றியும் தெரியவந்துள்ளது. அவை எங்கள் கடுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, இந்தத் தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குநர், ரூ. 20 கோடி மதிப்பில் போலியான செலவு கணக்கும் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், டாப்ஸியின் இடத்தில் நடந்த சோதனையிலும் இதே போன்ற விஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தில் நடந்த சோதனையில் அவர்களின் மின்னஞ்சல்கள், வாட்ஸப் உரையாடல்கள், ஹார்ட் டிக்ஸ் ஆகியவற்றிலிருந்து தரவுகள் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பில் இருந்த காஷ்யப் மற்றும் டாப்ஸி இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டு விசாரணை செய்துள்ளனர்.
காஷ்யப், பல், டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT