Published : 04 Mar 2021 01:12 PM
Last Updated : 04 Mar 2021 01:12 PM

தடை நீக்கம்; 'நெஞ்சம் மறப்பதில்லை' திட்டமிட்டபடி வெளியீடு: எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி

சென்னை

நீதிமன்ற தடை நீங்கியதால் திட்டமிட்டபடி 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகிறது என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் உள்ளது. அவ்வப்போது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, பைனான்ஸ் சிக்கலால் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன், மீண்டும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட்டன.

இறுதியாக, மார்ச் 5-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தவர்கள், உற்சாகமடைந்தார்கள். ஆனால், திடீரென்று ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்துக்கு தடைக்கேட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டுக்குத் தடையும் விதித்தது.

இதனைத் தொடர்ந்து, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமுக உடன்பாடு ஏற்படவே, நீதிமன்றத்தை நாடினார்கள். உடனடியாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகிறது.

நீண்ட நாட்கள் கழித்து 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாவதால் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில், "ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இடையிலான பிரச்சினை நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டு விட்டது. 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்து பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x