டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் திடீர் வருமான வரி சோதனை
நடிகை டாப்ஸி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை இன்று திடீர் சோதனை நடத்தியுள்ளது.
தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’, ‘காஞ்சனா 2’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்தார். இந்தியில் அவர் நடிப்பில் வெளியான ‘பிங்க்’, ‘தப்பட்’, ‘மன்மர்ஸியான்’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் டாப்ஸி, மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அவ்வப்போது இவருக்கும் நடிகை கங்கணாவுக்கும் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று (03.03.21) நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஸ் பால் ஆகியோரின் வீடுகளிலும் வருமானத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாப்ஸி, அனுராக், விகாஸ் ஆகியோரது இடங்களையும் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
