Published : 02 Mar 2021 05:19 PM
Last Updated : 02 Mar 2021 05:19 PM
‘தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ்’ என்று அந்தக் காட்சிக்கு மிகப் பிரமாதமான இசையை இளையராஜா கொடுத்திருந்தான். அப்படியொரு இசையை இளையராஜாதான் தர முடியும்’’ என்று இயக்குநர் பாரதிராஜா ‘கடலோரக் கவிதைகள்’ அனுபவங்களைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில், தன் திரை அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அதில், ‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் அனுபவங்களை அவர் தெரிவித்தார் :
’’கடலோரக் கவிதைகள்’ படத்தை எனக்கு மிகவும் பிடித்த லோகேஷனான முட்டம் பகுதியிலேயே எடுத்தேன். ஏற்கெனவே, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை இந்தப் பகுதியில்தான் எடுத்திருந்தேன். இங்கே உள்ள கடலும் அலைகளும் மணல்பரப்பும் பாறைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றுடன் நான் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். அற்புதமான இடத்தை விட்டு நகரவேமுடியாமல் நின்றிருக்கிறேன்.
இங்குதான் சத்யராஜையும் ரேகாவையும் வைத்து, ‘கடலோரக் கவிதைகள்’ படத்தை முழுவதுமாக எடுத்தேன். வழக்கம் போல், இளையராஜா அனைத்துப் பாடல்களையும் பிரமாதமாகக் கொடுத்தான். ஒவ்வொரு பாடல்களும் இன்றைக்கும் மறக்க முடியாத பாடல்களாக மக்கள் மனங்களில் இருக்கின்றன.
இந்தப் படத்தில் சத்யராஜ் ஒற்றைக் காலில் நிற்கும் காட்சி வைத்திருந்தேன். இந்தக் காட்சிக்கு சின்னதாக ஒரு பாட்டும் பி ஜி எம்மும் போடலாம் என்று இளையராஜாதான் சொன்னான். சரியென்று சொன்னேன். அதுதான் ‘தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ்’ பாட்டு.
அந்த இடத்துக்கு அற்புதமான மெட்டு போட்டு அந்தக் காட்சியையே பிரமாதப்படுத்தியிருந்தான் இளையராஜா. கட்டடத்தின் மேல் ஒற்றைக்காலில் நிற்பார் சத்யராஜ். கடலோரத்தில் பாறைகளின் மேல் சத்யராஜும் ரேகாவும் நிற்பார்கள். ஒற்றைக்காலில் நிற்கும் சத்யராஜ். பாறையின் மேல் நிற்கும் இரண்டுபேர். ஒரு டீச்சராக ரேகாவும் மாணவனாக சத்யராஜும் இருப்பார்கள். ரவுடித்தனம் பண்ணுகிற சத்யராஜ் கழுத்தில் கர்ச்சீப் கட்டியிருப்பார். அந்த கர்ச்சீப்பை அவிழ்த்து வீசுவார் ரேகா. அந்த கர்ச்சீப், அப்படியே பறந்து வரும். அதற்கொரு இசையைப் போட்டிருப்பான் இளையராஜா. அந்த கர்ச்சீப் பறந்து வந்து ஒரு பாறையின் மேல் விழும். அந்தப் பாறையில் அ ஆ இ ஈ எழுதப்பட்டிருக்கும். அங்கே இன்னொரு இசையைப் படரவிட்டிருப்பான். அப்படியொரு இசையை இளையராஜாதான் கொடுக்கமுடியும். வேறு யாரும் கொடுக்கமுடியாது.
படத்தில், இந்தக் காட்சியையும் கட் ஷாட்டுகளாக அடுக்கப்பட்ட விவரங்களையும் இசையையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT