Published : 24 Feb 2021 10:43 AM
Last Updated : 24 Feb 2021 10:43 AM

ஒரே படத்துக்கு மூன்று தலைப்புகளா?- ‘ஸ்பைடர்மேன்’ படக்குழுவினரின் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்

‘ஸ்பைடர்மேன்’ மூன்றாம் பாகத்தின் மூன்று வெவ்வேறு தலைப்புகளால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்' பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.

கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கூடவே ‘ஸ்பைடர்மேன்’ மூன்றாம் பாகத்துக்கான தலைப்பையும் பகிர்ந்துள்ளனர். ஆனால், மூவரும் வெவ்வேறு தலைப்பைப் பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் குழப்பம் அடைந்துள்ளனர்.

‘ஸ்பைடர்மேன் - போன் ஹோம்’, ‘ஸ்பைடர்மேன்- ஹோம் ரெக்கர்’, ‘ஸ்பைடர்மேன்- ஹோம் ஸ்லைஸ்’ என மூன்று வெவ்வேறு தலைப்புகளை அவர்கள் மூவரும் பகிர்ந்துள்ளனர். இந்த மூன்றில் எது உண்மையான தலைப்பு? அல்லது வழக்கம்போல மார்வெல் நிறுவனத்தின் விளம்பர உத்தியா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இதனால் ‘ஸ்பைடர்மேன் 3’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x