Published : 23 Feb 2021 12:01 PM
Last Updated : 23 Feb 2021 12:01 PM
தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ திரைப்படத்துக்கு நடிகர் மகேஷ் பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமான தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்துவிட்டு தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோர் படக்குழுவினருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பல்வேறு முன்னணி நடிகர்களும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு 'உப்பெனா' படத்தைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'' ‘உப்பெனா’ ஒரே வார்த்தையில் சொன்னால் ‘க்ளாசிக்’. புச்சிபாபு சனா, காலம் கடந்து போற்றப்படும் அரிய படம் ஒன்றை உருவாக்கியுள்ளீர்கள். உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். இப்படத்தின் இதயமென்றால் அது தேவிஸ்ரீ பிரசாத்தான். மிகச்சிறந்த இசையாக என்றென்றும் கொண்டாடப்படும். இன்று வரை உங்களின் பெஸ்ட் இதுதான் டிஎஸ்பி.
அற்புதமான இரண்டு புதுமுக நடிகர்கள் வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வைஷ்ணவ் தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் உண்மையான நட்சத்திரங்கள். நான் சொன்னதுபோல இப்படம் காலம் கடந்தும் போற்றப்படும் ஒரு படம். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்''.
இவ்வாறு மகேஷ் பாபு கூறியுள்ளார்.
பொதுவாகத் திரைப்படங்களையோ, படக்குழுவினரையோ ட்விட்டரில் பாராட்டும் மகேஷ் பாபு ஒரு வரியில் முடித்துக் கொள்வார். ஆனால், முதல் முறையாக தங்கள் படத்தைப் பாராட்டி நீண்ட பதிவை மகேஷ் பாபு வெளியிட்டதால் ‘உப்பெனா’ குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
#Uppena... One word... CLASSIC! @BuchiBabuSana you've made one of those rare timeless films... Proud of you!
— Mahesh Babu (@urstrulyMahesh) February 22, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT