Published : 22 Feb 2021 04:01 PM
Last Updated : 22 Feb 2021 04:01 PM

கெளதம் மேனனுக்கு மணிரத்னம் கூறிய அறிவுரை

நீ இயக்கி வெளியாகும் படங்களின் விமர்சனங்களைப் படிக்காதே எனறு இயக்குநர் மணிரத்னம் தன்னிடம் கூறியதாக கௌதம் மேனன் கூறியுள்ளார்.

திரையுலகில் 20 ஆண்டுகளை கௌதம் வாசுதேவ் மேனன் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் என்று பெயரெடுத்திருக்கும் கௌதம் மேனன் தற்போது சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

தனது 20 ஆண்டு கால திரைப் பயணம், தனது சிந்தனையோட்டம், தனக்கு உந்துதல் தரும் ஆளுமைகள் குறித்துப் பேசியிருக்கும் கௌதம் மேனன், தனது ஆதர்ச இயக்குநரான மணிரத்னம் குறித்தும், அவர் தனக்குக் கூறிய அறிவுரை குறித்தும் பகிர்ந்துள்ளார்.

"மோசமான கட்டத்தைத் தாண்ட மணிரத்னத்துடன் பேசியது எனக்குப் பெரிய விதத்தில் உதவியாக இருந்தது. விமர்சனங்களைப் படிக்க வேண்டாம் என்பதுதான் நான் அவரிடம் கற்ற பெரிய பாடம். எனது பட விமர்சனங்கள் மட்டுமல்ல, எந்த விமர்சனமாக இருந்தாலும் சரி, அதைப் படித்து அதனால் பாதிக்கப்படக் கூடாது. கடைசியாக 2012ஆம் ஆண்டு 'ஏக் தீவானா தா' விமர்சனத்தைத்தான் படித்தேன்.

'கௌதம் நீ முழு அர்ப்பணிப்போடு மனப்பூர்வமாக ஒரு படத்தை எடுத்திருக்கிறாய். அது எப்படி ஓடுகிறது என்பது மக்களுக்குத்தான் முக்கியம். உனக்கல்ல. எனவே எதற்காக அது உன் காதுகளுக்கு எட்ட வேண்டும்?' என்று மணிரத்னம் என்னிடம் கூறியது எனக்கு நினைவில் இருக்கிறது.

இன்றும் மணிரத்னம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு இளமையாகவே சிந்திக்கிறார். உரையாடலில் நம்ப முடியாத அளவு விஷயங்களைச் சொல்லுவார். அவருடன் நடக்கும் சின்னசின்ன உரையாடல்களும் நமக்குப் பெரிய உந்துதலாக இருக்கும்" என்று கௌதம் மேனன் பகிர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x