Published : 20 Feb 2021 12:11 PM
Last Updated : 20 Feb 2021 12:11 PM

முதல் பார்வை: பிட்டா கதலு

வெவ்வேறு சமூகச் சூழலில் வாழும் பெண்களின் உறவுச் சிக்கல்களை சுற்றி பின்னப்பட்ட கதைகளின் தொகுப்பே ‘பிட்டா கதலு’.

ராமுலா

தெலங்கானா மாநிலத்தில் ஒரு உள்ள குக்கிராமத்தின் வசிக்கும் பெண் ராமுலா. அவரது காதலர் ராம் சந்தர். இன்னொரு புறம் அரசியலில் தொடர்ந்து ஆண்களால் நிராகரிக்கப்படும் பெண் அரசியல்வாதி ஒருவர். ராம் சந்தருக்கு தன் காதலைப் பற்றி யாரிடமும் சொல்ல தைரியம் இல்ல. தியேட்டரில் காதலி ராமுலா முத்தம் தர மறுப்பதால் பிரேக்- அப் சொல்லி பிரிகிறார். சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு சூழலில் எதேச்சையாக அந்த பெண் அரசியல்வாதியை சந்திக்கிறார் ராமுலா. பிறகு என்னவானது என்பதே கதை.

ராம் சந்தராக நவீன் குமார் பெட்டிகந்தி. எம்எல்ஏ அப்பாவிடம் காதலை சொல்ல தயங்குவது, காதலியிடம் அனுதினமும் அறை வாங்குவது, என படம் முழுக்க தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராமுலாவாக புதுமுகம் சான்வே மேகனா. இது அவரது முதல் படம் என்பதை நம்ப முடியாத இயல்பான நடிப்பு. பெண் அரசியல்வாதியாக லக்‌ஷ்மி மஞ்சு. டிவி விவாதத்தில் தன்னை கேவலமாக பேசும் எதிர்கட்சி ஆளை திட்டுவது தொடங்கி இறுதி காட்சிவரை தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். கிராமத்துப் பின்னணிக்கு ஏற்ற நிகேஷ் பொம்மியின் ஒளிப்பதிவும், விவேக் சாகரின் இசையும் படத்துக்கு பலம்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு நகைச்சுவை கைகொடுத்திருக்கிறது. வாய்விட்டு சிரிக்கும்படியான காட்சிகளும் உண்டு. தியேட்டர் காட்சியிலேயே ராம் சந்தர் மற்றும் ராமுலா பாத்திரங்களின் தன்மையை நமக்கு உணர்த்தி விடுகிறார் இயக்குநர். படம் தொடங்கியது முதல் இறுதி வரை சுவாரஸ்யமாகவே செல்லும் திரைக்கதை, க்ளைமாக்ஸில் படுத்து விடுவது மிகப்பெரிய மைனஸ்.

ஆண்களுக்கு வெள்ளை நிறப் பெண்கள் மீதான் ஈர்ப்பு , அரசியலில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விஷயங்களை பாடம் எடுக்காமல் போகிற போக்கில் இயல்பான விதத்தில் சொன்ன தருண் பாஸ்கரை பாராட்டலாம். சிறப்பான நடிகர்கள், நகைச்சுவை வசனங்களோடு க்ளைமாக்ஸையும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருப்பாள் இந்த ‘ராமுலா’.

மீரா

சமூகத்தில் பெரும் தொழிலதிபராக இருப்பவர் விஸ்வா. அவரது மனைவி மீரா. தன்னை விட தன் மனைவி 18 வயது இளையவர் என்பதால் விஸ்வாவுக்கு எப்போதும் மனதில் ஒரு பாதுகாப்பின்மை குடிகொண்டிருக்கிறது. மனைவியை எந்நேரமும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார். இரு குழந்தைகளுக்கு தாயான மீரா தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். எழுத்தாளரான மீரா தான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நாவலில் தன் வாழ்க்கையை பற்றிய சில ரகசியங்களையும் இணைத்துள்ளார்.

தங்களின் திருமண நாள் பார்ட்டியில் மீராவை ஓவியமாக வரைந்து அன்பளிப்பு செய்யும் தன் நண்பர் அப்பாஸை விஸ்வா கோபத்தில் அடித்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே படத்தின் க்ளைமாக்ஸுக்கு வழிவகுக்கிறது.

மீராவாக அமலா பால். குழந்தைகளுக்காக வேறு வழியின்றி வயதான கணவருடன் வாழ்க்கையை ஓட்டும் மனைவியாக ஸ்கோர் செய்கிறார். பணக்கார தொழிலதிபராக ஜகபதி பாபு. மனைவியோடு பேசுபவர்கள் எல்லாரையுமே சந்தேகப் பார்வை பார்ப்பது, தனது நடவடிக்கைகளால் ஏற்பட்ட குற்ற உணர்வினால் மனைவியிடம் அழுது புலம்புவது, என இப்படத்தில் புதிய பரிணாமம் காட்டியிருக்கிறார். ஆனால் அமலா பால், ஜகபது பாபுவைத் தவிர மற்றவர்களின் நடிப்பு எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பல இடங்களில் இவர்கள் இருவரது நடிப்பையும் மீறி அவர்களது ஓவர் ஆக்டிங் வெளியே தெரிகிறது.

இயக்குநர் நந்தினி ரெட்டி க்ளைமாக்ஸ் என்ற ஒரு விஷயத்தை நம்பியே கதையை எழுதியிருப்பார் போலும். அதற்கு முன்பாக நடக்கும் சம்பவங்கள் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் எழுதப்பட்டது போலவே இருக்கின்றன. அமலா பால் மற்றும் ஜகபதி பாபு இடையிலான காட்சிகள் பார்க்கும் நமக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் அஸ்வின் கதாபாத்திரம் எல்லாம் தேவையற்ற திணிப்பு. ‘திரிஷ்யம்’ பட பாணியில் எடுக்க முயற்சி செய்யப்பட்ட கதையாக இருந்தாலும் க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில் எந்த விட மெனக்கடலும் இல்லாததால் பல இடங்களில் கொட்டாவி விட வைக்கிறாள் இந்த மீரா.

பிங்கி

ஹர்ஷாவின் மனைவி பிரியங்கா. விவேக்கின் மனைவி இந்து. ஆனால் கடந்த காலத்தின் விவேக்கும், பிங்கி என்று அழைக்கப்படும் பிரியங்காவும் திருமணமாகி விவாகரத்தானவர்கள். ஆனால் தற்போது மீண்டும் காதலர்களாக தொடர்கிறார்கள். ஒரு தவிர்க்க முடியாத சூழலில் இந்த நால்வரும் என்னவாகும் என்பதே ‘பிங்கி’.

பிங்கி/ பிரியங்காவாக ஈஷா ரெபா, ஹர்ஷாவாக ஸ்ரீனிவாஸ் அவசராலா, விவேக்காக சத்ய தேவ், இந்துவாக ஆஷிமா. இயக்கம் சங்கல்ப் ரெட்டி. இப்படி ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு அதை வெறும் 30 நிமிடங்களில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சொல்லவந்த விஷயங்களில் எந்தவொரு அழுத்தமும் இல்லாதது போன்ற ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் பிங்கி மற்றும் விவேக் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்த ஏன் இவ்வளவு பெரிய காட்சி? அதன் பிறகும் யார் யாருடைய மனைவி மற்றும் கணவர் என்ற குழப்பம் ஒரு கட்டம் வரை நீடிக்கிறது.

பிங்கி மற்றும் விவேக்கின் முந்தைய காதலைப் பற்றி வசனங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் நமக்கு எந்தவொரு தாக்கமும் ஏற்படாததால் படத்தின் இறுதி வரை நம்மால் ஒன்றமுடியவில்லை. மேற்குறிப்பிட்ட நால்வரும் சந்திக்கும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பார்வையாளர்களின் யோசனைக்கே விட்டது புதிய முயற்சி என்றாலும், அதற்கு முந்தைய காட்சிகளில் ஏற்படும் தொய்வுகளால் அது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.

எக்ஸ் லைஃப்

‘எக்ஸ் லைஃப்’ என்ற ஒரு கேம் அல்லது ஒரு செயலி தனது முய்நிகர் உலகம் மூலம் பாதி மக்கள் தொகையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மக்கள் நிஜ உலகத்தின் தொடர்பிலிருந்து விலகி ஒரு மெய்நிகர் (Virtual) உலகில் வாழ்ந்து வருகிறார்கள். அதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிப்பதால் நிஜ உலகில் நடக்கும் சுற்றுச் சூழல் பிரச்சினைகள், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் அரசுகள் கவிழ்ந்து உலகம் முழுக்க சர்வாதிகார ஆட்சிகள் தலைதூக்குகின்றன. இந்த ‘எக்ஸ் லைஃப்’ உலகத்தின் நிறுவனர் விக். ஒரு கணினியின் முன்னால் அமர்ந்து கொண்டு உலகையே கட்டுப்படுத்தி வருகிறார். தன் செயலியை ஹேக் செய்தவனிடம் காதல் என்று ஒன்று இல்லவே இல்லை. எல்லாம் வெறும் காமம் மட்டுமே என்று வாதிடுகிறார். அவரது அலுவலக சமையலறைப் பணிப்பெண்ணாக வரும் சுருதி ஹாசனின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே ‘எக்ஸ் லைஃப்’.

எக்ஸ் லைஃப் நிறுவனர் விக்ரமாக சஞ்ஜித் ஹெக்டே, பணிப்பெண்னாக சுருதிஹாசன் தங்களின் பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். துல்லியமான சிஜி, ஹாலிவுட் சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை நினைவூட்டும் செட்கள், கண்கவர் ஒளிப்பதிவு என தொழில்நுட்ப ரீதியாக பல ப்ளஸ்கள் இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் நாக் அஸ்வின்.

நிஜ உலகிலிருந்து விலகி சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கான ஒரு நல்ல கருவை எடுத்துக் கொண்டு அதை காட்சி ரீதியாக வெளிப்படுத்தாமல் படம் முழுக்க பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இடையில் இலுமினாட்டி, ரகசிய குழுக்கள் பற்றிய பாடங்கள் வேறு. படத்தின் நீளம் என்னவோ வெறும் 30 நிமிடங்கள் தான். ஆனால் படம் முடியும்போது 3 மணி நேரம் ஆகிவிட்ட அலுப்பை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்திய பெருமை இயக்குநரையே சாரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x