Published : 18 Feb 2021 12:50 PM
Last Updated : 18 Feb 2021 12:50 PM
பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் 2021ஆம் ஆண்டுக்கான படங்களின் வெளியீட்டுத் தேதிகளை அறிவித்துள்ளது.
பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஒய்ஆர்எஃப் என்று அழைக்கப்படும் யாஷ் ராஜ் பிலிம்ஸ். இந்நிறுவனம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘மொஹப்பத்தேய்ன்’, ‘ரப் னே பனா தி ஜோடி’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டுக்கான படங்களையும் அதன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது யாஷ் ராஜ் பிலிம்ஸ்.
* அர்ஜுன் கபூர், பரினீதி சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தீப் ஆர் பிங்கி ஃபரார்’. இப்படத்தை திவாகர் பானர்ஜி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் வரும் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
* 2005ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான படம் ‘பன்ட்டி ஆர் பப்ளி’. அந்தக் காலகட்டத்தில் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘பன்ட்டி ஆர் பப்ளி- 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் சதுர்வேதி, ஷர்வானி, ராணி முகர்ஜி, சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளார். வருண்.வி. ஷர்மா இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
* ரன்பீர் கபூர், சஞ்சய் தத், வாணி கபூர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஷம்ஷேரா’. 1800ஆம் ஆண்டில் பயணிக்கும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை கரண் மல்ஹோத்ரா இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஜூன் 25-ல் வெளியாகவுள்ளது.
* ரன்வீர் சிங் நடிப்பில் புதுமுகம் திவ்யாங் தாக்கர் இயக்கி வரும் படம் ‘ஜயேஷ்பாய் ஜோர்டார்’. இப்படத்தின் மூலம் ஷாலினி பாண்டே இந்தியில் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று வெளியாகவுள்ளது.
* பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ‘பிரித்விராஜ்’ என்ற வரலாற்றுத் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கிவரும் இப்படத்தில் 2017ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT