Published : 17 Feb 2021 04:36 PM
Last Updated : 17 Feb 2021 04:36 PM

ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதன் பின்னணி

சென்னை

ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது.

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். மேலும், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டார் எனத் தகவல் வெளியானது. பாலிவுட் ஊடகங்களும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி விலகலுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

தற்போது விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. கரோனா ஊரடங்கு சமயத்தில்தான் ஆமீர்கான் படத்துக்காகத் தேதிகள் ஒதுக்கினார் விஜய் சேதுபதி. அந்தச் சமயத்தில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, விஜய் சேதுபதியிடம் தேதிகள் கேட்டபோது அவரிடம் தேதிகள் இல்லை.

ஏனென்றால், 'லால் சிங் சட்டா' படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவர் தெலுங்குப் படங்களுக்கு ஒதுக்கியிருந்தார். இந்தத் தேதிகள் பிரச்சினைகளாலேயே விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனது. இதனை ஆமிர்கானிடம் தெரிவித்துவிட்டே விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

'லால் சிங் சட்டா' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக யார் நடித்து வருகிறார்கள் என்பதைப் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x