Published : 15 Feb 2021 08:11 PM
Last Updated : 15 Feb 2021 08:11 PM
இரண்டாம் உலகப் போர் தொடர்பான நூற்றுக்கணக்கான படங்கள் வந்துள்ளன. ஐரோப்பாவில் நடந்த நாஜிக்களின் அட்டூழியத்தை ரத்தம் சொட்ட சொட்ட நம் கண்முன் நிறுத்திய படங்கள் ஏராளம். இதனால் ஹிட்லர் காலத்து ஜெர்மானிய நாஜி வீரர்கள் மீது ஏற்பட்ட நிரந்தர வெறுப்பு இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை.
போருக்குப் பிந்தைய காலகட்டங்களை ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட சில நாடுகளின் படங்களே தெளிவாக எடுத்துக்காட்டின. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு டென்மார்க்கில் நடைபெறும் இத்திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது.
ஜெர்மன் படை போரில் சரணடைந்த பிறகு, மே 1945இல் போர் முடிவடைந்த நிலையில், 2,000க்கும் மேற்பட்ட ஜெர்மன் போர்க் கைதிகளை தங்கள் நாடுகளை விட்டு வெளியேறாமல் தடுத்தன. அதற்குக் காரணம் அந்த நாட்டின் கடற்கரையெங்கும் புதையுண்டிருந்த கண்ணிவெடிகளையெல்லாம் அகற்றிவிட்டுத்தான் அவர்கள் செல்ல வேண்டும் என்பது.
உண்மையில், ஐரோப்பாவைக் கைப்பற்றிய ஜெர்மானிய படைவீரர்கள் அதன் பல்வேறு நாடுகளிலும் மில்லியன் கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர். போர் முடிந்தபிறகு உயிர்களைப் பணயம் வைத்து கண்ணி வெடிகளை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடுகள் தள்ளப்பட்டன. இதற்காகவே போர் முடிந்தபின்னும் பலநாடுகள் ஜெர்மானிய போர்க் கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பாமல் தடுத்து நிறுத்தின.
போரின்போது நாஜிக்கள் புதைத்துவைத்த கண்ணி வெடிகளைச் செயலிழக்கச் வைக்கும் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர். கண்ணிவெடி அகற்றுவது என்பது ஏதோ பூமியிலிருந்து செடிகளைப் பிடுங்கி வேர்க்கடலையைப் பறிப்பது போன்றதல்ல. கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல, பூமிக்குள் புதையுண்டிருக்கும கண்ணிவெடிகள் பூமிக்கடியில் எங்கேயுள்ளன என்பதை எந்தவித அசம்பாவிதமும் நேராமல் முதலில் எச்சரிக்கையுடன் கண்டறிய வேண்டும். பின்னரே கண்ணிவெடி உள்ளடக்கிய சிலிண்டரிலிருந்து டெட்டனேட்டரைத் தனியே பிரித்தெடுக்க வேண்டும்.
மேற்கு டேனிஷ் கடற்கரையில் இருந்து 45,000 கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான கடினமான மற்றும் ஆபத்தான பணியைக் கொண்ட இளம் ஜெர்மானியர்களின் ஒரு சிறிய குழு எப்படிக் கொடூரமான முறையில் அவதிக்குள்ளானது என்பதை அண்டர் சான்டெட் (லேண்ட் ஆஃப் மைன்) என்ற டென்மார்க் படம் பாய்ச்சல் மிக்க ஒரு திரைக்கதை மூலம் சித்தரித்துக் காட்டுகிறது.
அண்டர் சான்டெட் (லேண்ட் ஆஃப் மைன்) திரைப்படத்தில் ஒரு முக்கியமான குறிப்பு இடம்பெறுகிறது. ஒட்டுமொத்த ஐரோப்பாவில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் டென்மார்க் கடற்கரையில் மட்டுமே 35 சதவீதம் என்கிறது. டென்மார்க் கடற்கரைகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 மில்லியன் கண்ணிவெடிகளை அகற்றியாக வேண்டும்.
மே 1945இல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிந்து, ஜெர்மன் ஆக்கிரமிப்பிலிருந்து டென்மார்க் விடுவிக்கப்பட்டதும், தோற்கடிக்கப்பட்ட ஜெர்மானிய இளம் வீரரகள் அணிவகுத்துச் செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. இதில் முதல் காட்சியிலேயே ஒரு டேனிஷ் சார்ஜென்ட், கர்னல் லியோபோல்ட் ராஸ்முசென், அணிவகுத்துச் செல்லும் ஜெர்மானியக் கைதிகளைக் கேவலமாகத் திட்டுகிறார். ''உங்களை யாரும் நாங்கள் கூப்பிடவில்லை. நாட்டை வெளியே போங்கடா நாய்களா'' என்கிறார். ஆரம்பக் காட்சியிலேயே டேனிஷ் சார்ஜென்ட் தனது நாஜிக்களின் மீதுள்ள வெறுப்பை உமிழ்கிறார்.
அதுமட்டுமின்றி அந்தப் பேரணியில் டேனிஷ் நாட்டுக் கொடி ஒன்றையும் எடுத்துச் செல்லும் ஒரு ஜெர்மன் போர்க் கைதியை ஆவேசமாக சரமாரியாக அடித்துக் கீழே தள்ளுகிறார். போதும் சார் என்பது போல அதைத் தடுக்க முற்பட வரும் இன்னொரு போர்க் கைதியையும் உதைக்கிறார்.
பின்னர் காட்சிகள் வேறொரு களத்திற்கு நகர்கினறன. ஜெர்மானிய இளம் போர்க் கைதிகள் சிலர், இயற்கையெழில் மிக்க டேனிஷ் நிலப்பரப்புகளில் நிறைந்த மேற்கு கடற்கரை வெளிகளில் ஜெர்மானியர்கள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக டென்மார்க் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியின்போதே வட்டமான கண்ணிவெடி சிலிண்டரிலிருந்து டெட்டனரேட்டரைத் திருகி செயலிழக்க வைக்க முற்படும்போது சிலரின் விரல்கள் நடுங்குகின்றன. இதனால் நமக்கு பதற்றம் கூடிவிடுகிறது. ஒரு டீன்ஏஜ் இளைஞன் கண்ணிவெடியைத் தவறுதலாகக் கைவைத்து கையாண்டபோது வெடித்துச் சிதறுகிறான். இக்காட்சிக்குப் பிறகான முழுப் படமும் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்துவிடுகிறது.
கடற்கரை அருகே தனது அணியை குன்றுகள் மீது அணிவகுத்து அழைத்துச் செல்லும் சார்ஜென்ட், '' இங்கு மொத்தம் 45,000 கண்ணிவெடிகள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஆறு கண்ணிவெடிகளை செயலிழக்கவைக்க முடிந்தால், மூன்று மாதங்களில் உங்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்'' என உறுதியளிக்கிறார்.
நாஜிப்படைகளின் மீதுள்ள கட்டுக்கடங்காத கோபத்தை, கசப்புணர்வைப் படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே வெளிப்படுத்தும் இந்த முரட்டு சார்ஜென்ட் அடுத்தடுத்த காட்சிகளில் தொடங்கி கடைசிவரை இளம் ஜெர்மன் போர்க் கைதிகள் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்பார்வையிடும் பணியை மேற்கொள்வதுதான் மொத்தப் படத்தின் முக்கால்வாசி காட்சிகளுமாகும்.
தொடக்கத்தில் ஒரு இளம் ஜெர்மானிய போர் வீரரிடம் கோவமாக நடந்துகொண்ட அதே சார்ஜென்ட் தன்னிடம் ஒப்படைக்கப்படும் இளம் போர்க் கைதிகளை வேலைவாங்கும்போதுகூட எவ்வளவு முரட்டுப்பேர்வழி, கோபக்காரர் என்பதைப் படம் முழுக்கக் காண்கிறோம்.
இயக்குநர் மார்ட்டின் ஜான்ட்வ்லீட் இப்படத்தை எந்தவித மிகை நவிற்சியும் இன்றி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கமிலா ஹெல்ம் நுட்சனின் மிகச்சிறந்த கேமரா காட்சிகளின் மூலம் கதைப்போக்கில் நுட்பமான திரைக்கதைக் காட்சிகளைக் கையாண்டுள்ளார். மார்ட்டின் ஜான்ட்வ்லீட்டின் குறிப்பிடும்படியான இயக்கத்தைப் பறைசாற்றும் காட்சிகள் நிறைய வருகின்றன. அதில் முக்கியமானது இப்படத்தில் வரும் ஒரு சிறுமியைப் பற்றிய கதையாகும்.
கடற்கரை அருகே யாருமற்ற வனாந்தர சமவெளிகளில் இனனொரு மரத்தடுப்பு வீடு இருக்கும். அதில் ஒரு பெண்மணியும் ஒரு குழந்தையும் அக்குழந்தையும் இருப்பார்கள். அருகில் இருக்கும் ஒரு தொழுவத்தில் அவர்கள் வளர்க்கும் பிராணிகள். எனினும் ஜெர்மானிய போர்க்கைதிகள் தங்கியுளள மரவீட்டுக்கு அருகான அந்த அண்டை வீட்டுப் பெண்மணி அவர்களை விரோதமாகவே நடத்துவார்கள். சில நாட்கள் பையன்கள் பசியோடு இருப்பது அறிந்தும்கூட அப்பெண்மணி எந்தவித உதவியும் செய்ய முன்வரமாட்டார். ஒருமுறை அப்பெண்ணின் பொம்மையின் காலில் அடிபட்டதாக அச்சிறுமி கூறும்போது பொம்மையின் கால்களுக்குக் கட்டுப்போடுவதுபோல ஏமாற்றி அச்சிறுமியிடமிருந்து ஓரிரு ரொட்டிகளை லாவகமாக எர்னஸ்ட் எனும் போர்க்கைதி திருடிக் கொள்வான். அந்த எர்னஸ்ட் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் ஒரு கட்டமும் வருகிறது.
அப்பெண்மணியின் குழந்தையான சிறுமி கடற்கரையில் விளையாடப் போன இடத்தில் ஆபத்தான கண்ணிவெடிகளின் பகுதிகளில் அதைப் பற்றி எதுவும் தெரியாமல் சிக்கிக்கொண்ட நிலையில் டீன்ஏஜ் போர்க்கைதிகள் அப்பெண்மணியிடம் தகவல் சொல்லி அழைத்துச் செல்வர். ஆனால் அச்சிறுமியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கவேண்டும். ஆனால், அதற்கும் அவர்கள் தயாராகின்றனர். அப்பெண்மணி மனம் கசிந்து கதறும் இடம் அது.
அச்சிறுமியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என சிறுவர்கள் தவிக்கிறார்கள். கண்ணிவெடி அகற்றுதலின்போது தன்னைப் போலவே இருக்கும் தனது சகோதரன் உயிரிழந்துவிட அதிலிருந்து சித்தபிரமை பிடித்தவன் போல இருக்கும் எர்ன்ஸ்ட்தான் அச்சிறுமியைக் காப்பாற்ற கண்ணி வெடியிலிருந்து ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகிறான். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கும்போதே துணிச்சலாகச் சென்று சிறுமியைக் காப்பாற்றி அனுப்பி விடுகிறான்.
ஆனால், குழந்தையைக் காப்பாற்றும் வேலைமுடிந்தபிறகு அவனும் அவர்களுடன் திரும்பியிருக்க வேண்டும். ஒருமுறை கண்ணிவெடி அகற்றுதலின்போது உயிரிழந்த தனது சகோதரனையே நினைத்து வாடும் எர்னஸ்ட், அந்தத் தெளிவற்ற கடற்கரை மணலில் வேண்டுமென்றே நடந்து செல்கிறான். அப்போது எதிர்பாராமல் ஒரு கண்ணிவெடி அவனைச் சிதறடிக்கிறது. அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
நாஜிக்கள் பழிவாங்கப்படவேண்டியவர்கள் என்ற வகையிலெயே கடுமையான ஒரு சார்ஜென்ட் அதிகாரியாக வரும் ரோலண்ட் முல்லரே இப்படத்தின் நாயகனாகத் திகழ்கிறார். அவரிடம் சிக்கிக்கொண்டவர்கள் டீன்ஏஜ் சிறியவர்களாயிற்றே என ஒருவகையில் நமக்குப் பாவமாக இருக்கும். ஆனால், வேறு மாதிரி யோசித்தால் இதே ஜெர்மனி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது அழிவுப்படையினராக வந்த இந்த போர்க்கைதிகள் என்ன மாதிரியான வெறியாட்டத்தில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்ற நினைவும் நமக்கு வரத்தான் செய்கிறது.
அப்போது இப்படத்தில் காட்டப்படும் இளம் போர்க் கைதிகளின் மீது உருவான அனுதாபம் மெல்ல சமன் செய்யப்பட்டுவிடும். ஆனாலும், இப்படத்தின் மையப்புள்ளிகளாக வைக்கப்பட்ட இச்சிறுவர்கள் மீது நமக்கு அனுதாபமே வருகிறது. புதைக்கப்பட்டிருப்பது கண்ணிவெடிகள் எனத்தெரிந்தே நம் கண்முன்னே அச்சிறுவர்களை ஆபத்தான வேலைக்காகக் கட்டாயப்படுத்துவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியே எழுகிறது. இரவுகளில் தங்களுக்கான மரத்தடுப்பு வீட்டின் உறக்கத்தின்போது எதிர்காலக் கனவுகளின் பல்வேறு ஆசைகளை அவ்வப்போது தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன அந்த பால்வடியும் முகங்கள்.
சார்ஜென்ட் அதிகாரி அவர்களை எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும் அவர் கருணையோடு வெளிப்படும் காட்சிகளும் நம் மனதில் ஈரத்தைக் கசியவிடுகின்றன. பகல் முழுவதும் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் இளம் போர்க் கைதிகள் ரொட்டியின்றி பசியால் வாடுகின்றனர். அதற்காகச் சொல்லப்படும் காரணம் ஒட்டுமொத்த டென்மார்க்கிலேயே போருக்குப் பின் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறைதான்.
கண்ணிவெடிகளை அகற்றும் ஜெர்மானிய போர்க் கைதிகள் பல நாட்கள் பசியோடு வாடுவது கண்டு மனம் இரங்குகிறார் அந்த டேனிஷ் சார்ஜென்ட். ஜீப்பை எடுத்துக்கொண்டு ராணுவ முகாம் பகுதிகளுக்குச் சென்று கிச்சனில் சென்று ரொட்டிகளை எடுத்து வருகிறார். இதனால் மேலதிகாரிகளின் கடும் கோபத்திற்கும் ஆளாகிறார்.
ரொட்டிகளைத் திருடிவந்ததாகக் கேள்விப்பட்டு அவர்களின் பகுதிக்கே வந்து சார்ஜென்ட்டுடன் சண்டை பிடிக்கிறார் ராணுவ உயரதிகாரி எபே. ஒரு சிறுவனை தனது சிறுநீரைக் குடிக்கும்படியும் கொடுமைப்படுத்துகிறார்.
இதனால் சார்ஜென்ட், எபேவுடன் மோதுகிறார். இக்காட்சிகளில் சார்ஜென்ட் கதாபாத்திரம் மிகவும் உயரமாய் நிமிர்ந்து நிற்கிறது. பசியால் வாடும் போர் க்கைதிகளுக்காக சவால் மிகுந்த உயரதிகாரிகளுடனான மோதலுக்குப் பிறகு அவர்களைப் பசியாற்றும் காட்சிகளால் பழைய அவரது ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகள் எல்லாம் காற்றில் கரையும் வியர்வைத் துளிகள் எனக் கரைந்து விடுகின்றன. அதன்பிறகு கண்டிப்புமிக்க சார்ஜென்ட் இளகிய மனமுடையவராக அந்த இளம் நண்பர்களுடன் கடற்கரையில் விளையாடுவது, சிரித்துப் பேசுவது, அரவணைத்து ஆறுதல் சொல்வது என்று எல்லாம் செய்வார்.
கர்னல் சார்ஜென்ட் லியோபோல்ட் ராஸ்முசென் கதாபாத்திரத்தின் இதே நிமிர்வு கிளைமாக்ஸில் சிகரமென உயர்ந்துவிடுவதுதான் இப்படத்தின் சிறப்பு.
கண்ணிவெடி அகற்றும் பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நேரம். கண்ணி வெடிகளை டிரக்கில் கொண்டுவந்து சேர்க்கும் இடத்தில் திடீரென எதிர்பாராமல் டெட்டனேட்டர் அகற்றப்படாத ஒரு கண்ணிவெடி சிதறி 7 பேர் பலியாவார்கள். இவ்விபத்தில் சிக்காத மற்ற நான்கு பேர் மட்டுமே எஞ்சுவார்கள்.
கண்ணிவெடிகள் அனைத்தையும் அகற்றிய பிறகு வீட்டுககு அனுப்புவதாக சிறுவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், படத்தின் இறுதிக் காட்சிகளின்போது மேலும் சிக்கலாகிறது. அவர்கள் பணி முடிந்துவிட்டதென நம்பிக்கையோடுதான் சார்ஜென்ட், ராணுவ அதிகாரி எபேவுக்குத் தகவல் அளிக்கிறார், அதேநேரம் அவர்கள் பணி முடிந்துவிட்டதையும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார். ஆனால், நடந்ததோ வேறு.
எஞ்சியிருக்கும் நான்கு பேரை கண்ணிவெடிகளை அகற்றும் இன்னும் ஒரு இடத்திற்காக வேறொரு குழுவில் இணைக்கப்படுவதாக ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கிறார்கள். டிரக்கில் ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்குக் கொண்டுசெல்லும்படி சார்ஜென்டுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
''முடியாது, அவர்களில் பலர் இறந்துவிட்டனர். இந்த இளம் போர்க் கைதிகளை அவர்களின் நாட்டுக்கு சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பதென வாக்குறுதி அளித்திருகிறேன்'' என மேலதிகாரி எபேவுடன் சார்ஜென்ட் வாடுதிவார். உயர் ராணுவ அதிகாரியோ அந்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பதோடு கடுமையாக நடந்துகொள்வார். அதற்கு சற்றும் தயங்காமல் அவரோடு கடும் வாக்குவாதத்தோடு மோதலிலும் ஈடுபடும் சார்ஜென்ட், மனிதாபிமானத்தின் சிகரமாகவே உயர்ந்து நிற்கும் இடம் அது.
கடும் வாக்குவாதம் மோதல்களுக்குப் பிறகு சார்ஜென்ட் அவர்களை டிரக்கில் மீட்டு வருவார். சமவெளிகளின் ஊடாக வெகுதூரப் பயணத்திற்குப் பிறகு நெருங்கிவரும் ஜெர்மன் எல்லை அருகே வந்து வண்டியை நிறுத்துவார். வெறும் 500 மீட்டர் தொலைவே எல்லைக்கோடு உள்ள பகுதிக்கு அவர்களை அழைத்துவந்த அந்த முரட்டு சார்ஜென்ட் அவர்களை நடந்தே தப்பித்து ஓடுமாறு டிரக் கதவுகளைத் திறந்துவிட, சுதந்திரக் காற்றின் உண்மையான வெளிகளில் அந்த ஜெர்மானிய இளம் போர்க் கைதிகள் செடி கொடிகள் ஊடே தப்பித்து ஓடத் தொடங்குவார்கள்.
இப்படத்தை மாக்ஸ் முல்லர் பவன் போன்ற இடங்களில் ஏதோ ஒரு திரைவிழாவின்போது எப்போதோ இப்படத்தைப் பார்த்திருந்தாலும் தற்போது இக்கட்டுரையின்மூ லம் இப்படத்தை அறிமுகப்படுத்துவதற்கான நம்பகமாக தகவல்களைத் தேடி இணையதளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு தகவல் கிடைத்தது.
இப்படத்தில் காட்டப்பட்ட இடங்கள் அனைத்தும் இரண்டாம் போருக்குப் பிறகு கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட ஓக்ஸ்பெல்லெஜிரென் மற்றும் வர்டே பகுதிகள் உள்ளிட்ட உண்மையான மேற்கு கடற்கரை பகுதிகளே ஆகும்.
2014 ஜூலையில் தொடங்கிய படப்பிடிப்பு இரண்டே மாதங்களில் நடைபெற்று ஆகஸ்ட் 2014ல் முடிவடைகிறது. மேலும் ஒரு தகவல், 'அண்டர் சான்டெட்' (லேண்ட் ஆஃப் மைன்) படப்பிடிப்பின் போது பூமிக்கடியில் இருந்து அகற்றப்படாத மேலும் ஒரு கண்ணிவெடியை கவனமாக அகற்றியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT