Last Updated : 15 Feb, 2021 03:11 AM

 

Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

பெண் குழந்தைகள் மீது பாசம் வைக்கிறோம்.. படிக்க வைக்கிறோமா?- ‘கமலி from நடுக்காவேரி’ இயக்குநர் ராஜசேகர் துரைசாமி நேர்காணல்

திருச்சி பக்கம் இருக்கும் சொந்தஊருக்கு ஒருமுறை போயிருந்தபோது, நண்பரின் வீட்டுக்கும் போனேன். அவருக்கு ரெண்டு பிள்ளைங்க. பையனை பக்கத்து டவுன்ல இருக்குற சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்திருந்தார். மகளை அதே ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தார். ‘‘மகளை வெளியூர் பள்ளிக்கு அனுப்பலையா?’’ என்றேன். ‘‘படிச்சு என்ன பண்ணப்போறா? இந்த வருஷமோ, அடுத்த வருஷமோ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்து கொடுத்துட வேண்டியதுதான்’’ என்றார் வெகு இயல்பாக. எனக்கு பயங்கர அதிர்ச்சி. அப்போது தட்டிய பொறிதான் ‘கமலி from நடுக்காவேரி’ கதை.. என்று சுவாரஸ்யமாக பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி. அவருடன் பேசியதில் இருந்து..

தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரிக்கும் சென்னை ஐஐடிக்கும் என்ன சம்பந்தம்?

நடுத்தர ஊர் மாணவிகள் சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனத்துக்கு படிக்க வருவது சவாலான விஷயம். அதுதான் படத்தின் களம். பல பெற்றோர்கள் மகன் அளவுக்கு மகளை படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதற்காக,மகள் மீது பாசம் இல்லை என்று அர்த்தம் அல்ல. மகளுக்கு நகை, சொத்து சேர்ப்பதிலும், திருமணம் செய்து வைப்பதிலுமே அதிக அக்கறை காட்டுகின்றனர். ‘அப்பா, அம்மா முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்கும்’ என்று பெண் பிள்ளைகளும் இருந்துவிடுகின்றனர். அதைப் பற்றி பேசும் படம்தான் இது.

நடுக்காவேரியில் பிறந்த கமலிக்கு, சென்னை ஐஐடியில் படிக்க ஆசை. அதற்காக அவர் செய்யும் முயற்சிகள், எதிர்கொள்ளும் தடைகள், நாட்டிலேயேமுதல்தர கல்வி நிலையத்துக்கு வந்த நடுத்தர ஊர் மாணவியின் உணர்வுகள், அவரது பலம், பலவீனம் என்ன? பலத்தைக் கொண்டு பலவீனத்தை ஜெயித்தாரா என்பதுதான் கதை. பெற்றோர், பிள்ளைகள் என இரு பக்கங்களில் இருந்தும் கதையை நகர்த்தி உள்ளேன். இக்கதையில், கமலிக்கு வில்லன் வெளி நபர் யாரும் அல்ல. கமலிக்கு அவரேதான் வில்லி.

நாயகனுக்கு வேலையே இல்லாதபோது, மும்பை பையனை நாயகன் ஆக்கியது ஏன்?

கமலியின் 18 முதல் 24 வயது வரையிலான காலகட்டக் கதை இது. அதனால், காதலை கடக்காமல் இருக்க முடியாது. நாயகியின் பயணத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக நாயகன் பாத்திரம் இருக்கும். ‘டியர் ஜிந்தகி’ என்ற இந்தி படத்தில் நடித்த ரோஹித் ஷரப்பை பார்த்ததுமே அவர்தான் இப்படத்துக்கு நாயகன் என முடிவு செய்தேன். பாலிவுட்டில் பிஸியாக இருந்த அவர், 22 நாள் கால்ஷீட் கொடுத்துநடித்துள்ளார். இனி தமிழில் அவரை தொடர்ந்து பார்க்கலாம்.

‘கயல்’ ஆனந்தி, கமலி ஆனது எப்படி?

கிராமமும், நகரமும் கலந்த நடுத்தரமான ஊரில் வளர்ந்த பெண் என கதை எழுதும்போதே, முதலில் நினைவுக்கு வந்தது ஆனந்தியின் முகம்தான். அவரை அணுகியபோது, ஆந்திராவில் சொந்த ஊரான வாரங்கல்லில் படிப்பு, தேர்வு என பிஸியாக இருந்தார். நேரில்சென்று கதை சொன்னதும், ‘‘எப்போதுபடப்பிடிப்பு?’’ என்று ஆர்வமானவர், காலேஜ் பேக் மாட்டிக்கொண்டு ஐஐடி மாணவியாகவே ஆகிவிட்டார்.

உங்கள் சினிமா பயணம் குறித்து..

நானும், ஏ.ஆர்.முருகதாஸும் இயக்குநர் உதயசங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தோம். பிறகு நான்லிங்குசாமியிடம் வந்து சேர்ந்தேன். அவரது குழுவில் துணை இயக்குநராக பணியாற்றினேன். ‘கமலி from நடுக்காவேரி’ போன்ற படத்தை முதலில்இயக்கியது பெருமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x