Published : 03 Feb 2021 12:52 PM
Last Updated : 03 Feb 2021 12:52 PM

புதிய ஸ்டுடியோ தொடங்கினார் இளையராஜா: வெற்றிமாறன் படத்துக்காகப் பாடல் பணிகள் தொடக்கம்

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ | படங்கள்: எல்.சீனிவாசன்

சென்னை

வெற்றிமாறன் படத்துக்கான பாடல் உருவாக்கத்துடன் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ தொடங்கப்பட்டது.

நீண்ட வருடங்களாக பிரசாத் ஸ்டுடியோவுக்குள் தனியாக இளையராஜா ஸ்டுடியோ அமைத்துப் பணிபுரிந்து வந்தார். தற்போது அந்த நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து வெளியேறிவிட்டார். தனியாக ஸ்டுடியோ உருவாக்குவதற்காக கோடம்பாக்கத்தில் இருந்த எம்.எம். திரையரங்க வளாகத்தை விலைக்கு வாங்கினார் இளையராஜா.

அந்தத் திரையரங்கிற்கு முன்னால் இருந்த கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, நீண்ட நாட்களாக ஸ்டுடியோவுக்கான பணிகள் நடைபெற்று வந்தன. இன்று (பிப்ரவரி 3) இளையராஜா தனது இசையமைப்புப் பணிகளை புதிய ஸ்டுடியோவில் தொடங்கினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சூரி நடிக்கும் படத்துக்கான பாடலுடன் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ பணிபுரியத் தொடங்கியது. இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஸ்டுடியோ தொடக்கத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் இளையராஜா பேசும்போது, "பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். ரெக்கார்டிங் ஸ்டுடியோ தேவைப்பட்டதால் இந்த இடத்தை வாங்கி, புதிதாக உருவாக்கி, இன்று இசையமைக்கும் பணிகளைத் தொடங்குகிறேன். இன்னும் உள்ளே கொஞ்சம் வேலை இருப்பதால் பிப்ரவரி 7, 8-ம் தேதி முதல் தொடர்ச்சியாகப் பணிபுரியத் தொடங்குவேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து "பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்து பணிகளைத் தொடங்கியுள்ளீர்கள். இந்த நாளை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்கு, "எனக்கு வாழ்க்கையில் எல்லா நாளும் ஒரே நாள்தான்” எனப் பதிலளித்தார்.

மேலும், "தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு இளையராஜா பதில் கூறுகையில், "மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச் சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள் போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது? அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும் என்று மழையிடம் கேட்க முடியுமா?" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x