Published : 02 Feb 2021 05:09 PM
Last Updated : 02 Feb 2021 05:09 PM
ஹலிதாவின் உழைப்புக்கு இதுவல்ல உயரம் என்று சமுத்திரக்கனி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஏலே'. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை புஷ்கர் - காயத்ரி ஜோடி தயாரித்துள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இந்த விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.
இதில் சமுத்திரக்கனி பேசியதாவது:
" 'ஏலே' படத்தில் நடித்த 35 நாட்களும் மறக்க முடியாத அனுபவம். முதல் 8 நாட்கள் பிணமாகப் படுக்க வைத்துவிட்டார்கள். சில நாட்களில் அப்படியே தூங்கிவிட்டேன். பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் நிஜமாகவே அழ ஆரம்பித்துவிடுவார்கள்.
இயக்குநர் ஹலிதா மாதிரி ஒரு இயக்குநர் கிடைக்க நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 16 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்துப் பிள்ளையாகப் பார்த்தது. இப்போது இவ்வளவு வளர்ச்சி என்பது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தக் கதையை 9 வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார். பிறகு 5 வருடங்களுக்கு முன்பு சொன்னார். ஏனென்றால் இதுதான் அவருடைய முதல் கதை. முதலில் கதையைக் கேட்டவுடன் இருந்த பிரமிப்பு, பின்பு அடுத்த கட்டத்துக்கு எடுத்துவந்த விதம் என பயங்கரப் பிடிவாதமாக இருந்தார். ஆனால், அது எங்கேயுமே தெரியாது. அவருடைய உழைப்பு, இயற்கையின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவை என்னைப் பல இடங்களில் வியக்க வைத்தது. அவருடைய உழைப்புக்கு இதுவல்ல உயரம். இன்னும் பெரிய உயரத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்".
இவ்வாறு சமுத்திரக்கனி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT