Published : 30 Jan 2021 03:24 PM
Last Updated : 30 Jan 2021 03:24 PM
மன அழுத்தத்திலிருந்து தான் மீண்டு வந்த அனுபவம் குறித்து நடிகை நமீதா பகிர்ந்துள்ளார்.
‘எங்கள் அண்ணா’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நமீதா. அடுத்த சில வருடங்கள் பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். அவ்வப்போது தெலுங்கிலும் நடித்து வந்தார்.
2010க்குப் பிறகு நமீதா நடிப்பது படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். 2017ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திராவை மணந்தார். 2019ஆம் வருடம் பாஜகவில் இணைந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 7 படங்களில் மட்டுமே நமீதா நடித்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு:
"அன்று / இன்று
இடது பக்கம் நான் கருப்பு உடை அணிந்திருக்கும் புகைப்படம் குறைந்தது 9-10 வருடங்களுக்கு முன் எடுத்தது. வலது பக்கம் இருக்கும் புகைப்படம் சில நிமிடங்களுக்கு முன்னால் எந்தவித ஒப்பனையும் ஃபில்டரும் இன்றி எடுத்தது.
இப்போது இதை நான் பதிவிடக் காரணம், மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதால்தான். இடது பக்கம் இருக்கும் புகைப்படத்தில் நான் அதிக மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது அது எனக்குத் தெரியக்கூட இல்லை என்பதுதான் மிகவும் மோசமான விஷயம். மிகவும் அசவுகரியமான ஒரு மனநிலையில், யாருடனும் பழக முடியாமல் அன்று இருந்தேன். அது மட்டுமே எனக்குப் புரிந்தது.
இரவினில் தூக்கம் வரவில்லை. அதிகமாக உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன். தினமும் பீட்சா சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு நாள் பார்த்தால் நான் அதிக பருமனாகியிருந்தேன். உடல் வடிவமே இன்றி இருந்தது. எனது அதிகபட்ச எடையான 97 கிலோவில் இருந்தேன். நான் குடிபோதைக்கு அடிமையானதாக சிலர் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். ஆனால் சினைப்பை நோய்க்குறியும் (PCOD), தைராய்ட் பிரச்சினையும் இருந்தது எனக்கு மட்டுமே தெரியும்.
அதிகமாகக் தற்கொலை எண்ணங்கள் வர ஆரம்பித்தன. நான் தேடிய மன அமைதியை யாராலும் எனக்குத் தர முடியவில்லை. ஐந்தரை வருட மன அழுத்தத்துக்குப் பின், நான் என் கிருஷ்ணரைக் கண்டுகொண்டேன். மஹா மந்திராஸ் தியானத்தைத் கண்டறிந்தேன். எந்த மருத்துவரிடமும், சிகிச்சைக்கும் நான் செல்லவில்லை.
எனது தியானமும், கிருஷ்ணருக்காக நான் பக்தியுடன் செலவிட்ட நேரமும்தான் எனது சிகிச்சை. ஒரு வழியாக நான் அமைதியைக் கண்டறிந்தேன். வாழ்நாள் காதலைத் தேடிப் பிடித்தேன்.
இந்தப் பதிவின் நீதி என்னவென்றால், நீங்கள் வெளியில் தேடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றும் உங்களுக்குள்தான் இருக்கிறது".
இவ்வாறு நமீதா தெரிவித்துள்ளார்.
கடைசியாக நமீதா 2019ஆம் ஆண்டு தமிழில் ‘பொட்டு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT