Last Updated : 28 Jan, 2021 04:02 PM

 

Published : 28 Jan 2021 04:02 PM
Last Updated : 28 Jan 2021 04:02 PM

முதல் பார்வை: கபடதாரி

சென்னை

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் 3 பேர் இறந்தது குறித்த வழக்கைக் கையில் எடுத்து, அது தொடர்பான தகவல்களைச் சேகரித்து, உண்மையைத் தேடி, குற்றவாளியைக் கண்டறிய முற்படும் போலீஸ் அதிகாரியின் பயணமே ‘கபடதாரி’.

போக்குவரத்துக் காவல்துறையில் சக்தி (சிபிராஜ்) உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார். ஆனால், அவருக்கு க்ரைம் பிரிவில் பணிபுரியவே விருப்பம். ஆனால், கமிஷனர் அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் தொடர்ந்து மறுக்கிறார். சிபிராஜ் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட பகுதியில் மெட்ரோ பாலத்துக்கு அடியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. தன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இது நடந்திருப்பதால் க்ரைம் பிரிவு ஆய்வாளரிடம் தன்னையும் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சுகிறார். ஆய்வாளர் மறுக்கிறார். ஆனாலும், அதிகாரபூர்வமாக இல்லாமல், தன் சொந்த ஆர்வத்தில் ரிஸ்க் எடுத்து நிறைய தகவல்களைச் சேகரிக்கிறார். அவருக்குப் பத்திரிகையாளர் குமார் (ஜெயப்பிரகாஷ்), விருப்ப ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ரஞ்சன் (நாசர்) ஆகியோர் உதவுகிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன, அந்த 3 பேர் யார், அது இயற்கை மரணமா, கொலையா?, டிராஃபிக் எஸ்.ஐ.யால் க்ரைம் பிரிவில் துப்பு துலக்கி உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய முடிந்ததா, படத்தின் தலைப்புக்குக் காரணகர்த்தாவான விஷமதாரி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

கன்னடத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கவலுதாரி’என்ற க்ரைம் த்ரில்லர் படத்தைத் தமிழில் ‘கபடதாரி’ எனும் பெயரில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

‘சைத்தான்’,‘சத்யா’படங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள மூன்றாவது படம், ரீமேக் வரிசையில் இரண்டாவது படம். மர்மக் கதை என்றால் ரசிகர்களுக்குத் தீனி போடுவது அவசியம். அதில் ரசிகர்களுக்குத் திருப்தியைக் கொண்டுவர படாதபாடு படவேண்டியிருக்கும். மூன்று படங்களும் மர்மத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அந்த ரிஸ்க்கை அழகாக எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார் பிரதீப்.

சிபிராஜ் கம்பீரமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். போக்குவரத்துக் காவல்துறை என்பதால் வழக்கமான பணி மீதான அலுப்பை வெளிப்படுத்துவது, க்ரைம் வழக்கு மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவது என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்க முயன்றுள்ளார். ஆனால், நாசர், ஜெயப்பிரகாஷ் போன்றோருடன் தோன்றும்போது அவர் நடிப்பில் போதாமை வெளிப்படுகிறது. எமோஷனல் காட்சிகளில் பதற்றத்தையும், பிரச்சினையின் தீவிரத்தையும் காட்டாமல் வெறுமனே சத்தம் போடுகிறார். நடிப்பில் அவர் இன்னும் மெருகேற வேண்டியுள்ளது.

நந்திதா ஸ்வேதாவுக்கு வழக்கமான டூயட், காதல் காட்சிகள் என்று எதுவும் இல்லை. இந்தப் படத்துக்கு இது தேவையில்லாததால் அதுவே ஆறுதல் அளிக்கிறது. கதைக்கும் அவருக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லாததால் குணச்சித்திரக் கதாபாத்திரம் என்ற அளவிலேயே அவரது பங்களிப்பு சுருங்கிவிடுகிறது.

படத்தைத் தாங்கிப் பிடிக்கும் இருவர் நாசரும், ஜெயப்பிரகாஷும். ஜெயப்பிரகாஷ் பக்குவமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். நாசர் வேற லெவல் அனுபவத்தை அப்படியே தன் நடிப்பால் இறக்கிவைத்து நம்பகத்தன்மையைக் கூட்டுகிறார்.

கன்னடத்தில் வில்லனாக நடித்த சம்பத் மைத்ரேயாவே இதிலும் நடித்துள்ளார். பிற மொழி நடிகர் என்பதால் அவரது நடிப்புக்கும், குரலுக்குமான இடைவெளி நெருடலாக உள்ளது. ராயுடுவாக நடித்த ‘ராட்சசன்’ யாசர், நடிகை ரம்யாவாக வந்த சுமன் ரங்கநாதன், சாய் தீனா, ஜே.சதீஷ்குமார், தனஞ்ஜெயன் ஆகியோர் கதாபாத்திரங்களின் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் சில காட்சிகளில் அடியாளாக முகம் காட்டியுள்ளார்.

த்ரில்லர் படத்துக்குரிய ஒளிப்பதிவைக் கச்சிதமாகத் தந்துள்ளார் ராசாமதி. சைமன் கே.கிங்கின் பின்னணி இசை படத்துக்குப் பெரும் பலம். கபடதாரி டைட்டில் பாடலை எழுதிய அருண் பாரதி கவனிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் இருக்கும் தொய்வை மட்டும் இயக்குநர் ஒத்துழைப்புடன் பிரவீன் கே.எல். சரி செய்திருக்கலாம். மற்றபடி நேர்த்தியான எடிட்டிங்கில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

டூயட், காதல் என்று பாடல்களை அடுக்காமல் மான்டேஜிலேயே பாடல்களை முடித்த விதம், நாசருக்கு தனி ஃபிளாஷ்பேக் காட்டாமல் தவிர்த்தது ஆகியவை இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்கான உதாரணங்கள். ஹேமந்த் ராவின் கதைக்குச் சேதாரம் விளைவிக்காமல் தனஞ்ஜெயனும், ஜான் மகேந்திரனும் திரைக்கதை அமைத்துள்ளனர். உண்மையைத் தேடும் பயணத்தில் நாசரின் ஆலோசனையும், சிபிராஜ் செயல்படுத்தும் விதமும் ஸ்மார்ட். அதுவும் துரத்திவரும் போலீஸை டைவர்ட் செய்யும் ஐடியா அட போட வைக்கிறது. ஜெயப்பிரகாஷ், சிபிராஜ், ஜே.சதீஷ்குமாருக்கான தொடர்பைக் குறிக்கும் ட்விஸ்ட் செம்ம.

சில இடங்களில் மட்டும் லாஜிக் இடிக்கிறது.‘நான் டிப்பார்ட்மென்ட் ஆள்தான், எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருவேன்’என கமிஷனரிடமே சிபிராஜ் சொல்வது, போலீஸைப் பார்த்து ஓட்டமெடுக்கும் சாய் தீனாவை, ‘ஓடாதே நில்லு’என்று விரட்டுவது, ‘நடிச்சுட்டு வந்து நடிக்காம பதில் சொல்றேன்’ என நடிகை சொல்வது என வசனங்கள் கொஞ்சம் காமெடியாக உள்ளன. ஒரே ஒரு நபர் ஒரு நாளிதழை நடத்துவதாகக் காட்டுவதெல்லாம் ஏற்புடையதல்ல. பிரபலமான நபர் கொலை செய்யப்பட்ட பிறகு போலீஸ் அதை விசாரிக்காமல் விட்டுவிடுவதும் நம்பும்படியாக இல்லை.

இவற்றைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், கதையின் போக்கில் சுவாரஸ்யம் சேர்த்து, அதுவா இதுவா என்று யோசிக்க வைத்து, விசாரணைப் படலத்தில் வெவ்வேறு கோணங்களை அடர்த்தியுடன் பதிவு செய்து, திணறவைக்கும் ட்விஸ்ட்டில் சறுக்காமல், ஏமாற்றாமல், எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த விதத்தில் ‘கபடதாரி’ கவனம் ஈர்க்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x