Published : 27 Jan 2021 11:41 AM
Last Updated : 27 Jan 2021 11:41 AM
விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் தீவிரவாதிதான் என்று சர்ச்சையான வகையில் பேசியுள்ளார் நடிகை கங்கணா.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். டிராக்டர் செல்ல தனியான வழித்தடத்தை டெல்லி போலீஸார் உருவாக்கினர். ஆனால், விவசாயிகளில் ஒரு பிரிவினர் மத்திய டெல்லிக்குள் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தனர்.
இதில் போலீஸாருக்கும், விவசாயிகளில் ஒரு பிரிவினருக்கும் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில், சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசும் இடத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்துக்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று நான் சொன்னதற்காக ஆறு நிறுவனங்கள் என்னைத் தூதராக வைத்துக் கொள்ளமுடியாது என்று கூறி என்னுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன. இப்போது சொல்கிறேன், தேச விரோத நிறுவனங்கள் உட்பட இந்தக் கலவரத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியரும் தீவிரவாதிகள்தான்.
உலகத்தின் முன்னால் நாம் இப்போது கேலிக்குள்ளாகி இருக்கிறோம். நம்மிடம் எந்த ஒரு கவுரவமும் மிச்சமில்லை. நம் நாட்டுக்கு அடுத்த நாட்டின் பிரதமர் சிறப்பு விருந்தினராக வந்தாலும் நமக்குக் கவலையில்லை. அவர்கள் முன்னால் நாம் நிர்வாணமாக அமரலாம். இது இப்படியே தொடர்ந்தால், நாட்டில் முன்னேற்றமே இருக்காது. விவசாயிகள் என்று சொல்லப்படுபவர்களின் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் நம் நாட்டையும், அரசையும், நீதிமன்றத்தையும் கேலிக்கு ஆளாக்கிவிட்டனர்''.
இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT