Published : 23 Jan 2021 08:59 PM
Last Updated : 23 Jan 2021 08:59 PM
நேர்மைக்கு நான் மட்டுமே பிரதிநிதியல்ல என்று ஆரி தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டிற்கான பிக் பாஸ் போட்டி கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள்.
இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மொத்தம் பதிவான 30 கோடி ஓட்டுகளில், ஆரிக்கு 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. பாலாஜி இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஆரி அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
'பிக் பாஸ்' அனுபவம் மூலம் கிடைத்த சந்தோஷம் என்ன?
பலர் என்னிடம், அவர்களின் குழந்தை வளர்ந்து என்னைப் போல ஆக வேண்டும் என்று சொன்னார்கள். இந்தப் போட்டியில் நேர்மையாக விளையாடியதில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதைப் பார்க்கிறேன். தமிழ் பேசுவது, உணவை வீணாக்காமல் இருப்பது என சக போட்டியாளர்கள் மத்தியில் மாற்றத்துக்காக என்னால் வித்திட முடிந்ததிலும் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஆக்ரோஷமான மனிதர்களை எப்படிக் கையாள்வீர்கள்? பாலாஜியுடனான உங்கள் போட்டி சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டதே?
நாங்கள் வெளியேறும் முன்னர் அவருடன் மனம் விட்டுப் பேசினேன். பொறுமையாக இரு, மற்றவர்கள் பேசுவதைக் கேள், அவர்கள் நிலையிலிருந்து வாழ்க்கையைப் பார் என்று அவரிடம் சொன்னேன். உண்மையில் பாலாஜியிடம் நான் என்னைத்தான் பார்க்கிறேன். சில வருடங்களுக்கு முன் நான் அப்படித்தான் இருந்தேன்.
இந்தப் பயணத்தில் உங்களை ஆதரித்த ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரு மரத்தை நடுங்கள். உங்கள் அக்கம்பக்கத்தில் இருக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு (ட்யூஷன்) எடுங்கள். குழந்தைகள் படிக்கக் கூடிய இடத்தில் திருக்குறளை எழுதி வையுங்கள். மாற்றத்துக்கான காரணமாக இருங்கள்.
ஒருவேளை உங்களுக்குத் தெரிந்து யாராவது இவற்றை அக்கறையுடன் செய்கிறார்கள் என்றால் அவர்களை அங்கீகரித்துக் கொண்டாடுங்கள். நேர்மைக்கு நான் மட்டுமே பிரதிநிதியல்ல. அது நம் அனைவரிடமும் இருக்கும் நல்லொழுக்கம்.
இவ்வாறு ஆரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT