Published : 23 Jan 2021 04:54 PM
Last Updated : 23 Jan 2021 04:54 PM
'சில்லுக்கருப்பட்டி' நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சில்லுக்கருப்பட்டி'. 4 கதைகள் கொண்ட இந்தப் படத்தில் 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக ஸ்ரீராம் நடித்திருந்தார். வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய படம் இது.
இவரைப் பலரும் கிராவ்மகா ஸ்ரீராம் என்றே அழைத்து வந்தனர். இவருக்கு வயது 60. 'இமைக்கா நொடிகள்', 'அதோ அந்த பறவை போல', 'வலிமை', 'கூட்டத்தில் ஒருவன்', 'எனிமி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமன்றி முன்னணி நடிகர்களுக்குச் சண்டைப் பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுத்துள்ளார் ஸ்ரீராம்.
தமிழக காவல்துறையில் கிராவ்மகா என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (ஜனவரி 23) காலை 6 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேங்கைச் சுற்றிப் பார்த்துள்ளார்.
அந்தச் சமயத்தில் கால் இடறிக் கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவருடைய உயிர் பிரிந்திருந்தது.
ஸ்ரீராம் மனைவியின் பெயர் ஸ்ரீகீதா. மகள் பெயர் ஸ்ரீஜா. இவர் இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது இறுதிச் சடங்கு வேளச்சேரி மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
ஸ்ரீராமின் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கால் இடறி விழுந்துள்ளதால், சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT