Published : 18 Jan 2021 07:20 PM
Last Updated : 18 Jan 2021 07:20 PM
பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஆன மோதல் சில நாட்களாக அமைதியாக இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று (ஜனவரி 18) இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரைக் கடுமையாகச் சாடினார்.
அந்தச் சந்திப்பில் தினா பேசும்போது, "தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம். 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்" என்று பேசினார்.
இந்நிலையில், பத்ம விபூஷண் விருதைத் திரும்ப அளிக்கவுள்ளார் இளையராஜா என்ற செய்தி வைரலாகப் பரவியது. இது தொடர்பாக இளையராஜா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். அப்படியொரு கருத்தை நான் வெளியிடவே இல்லை" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தினாவும் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தவறான புரிதல் ஏற்பட்டுவிட்டது. பிரசாத் ஸ்டுடியோ உயரிய விருதை அவமானப்படுத்தி கிடங்கில் தூக்கிப் போட்டுவிட்டார்கள் என்ற ஒரு பதிவைத்தான் நான் செய்தேன். இளையராஜாஅந்த விருதைத் திரும்ப அளிக்கப் போகிறார் என்பது போல தவறுதலாகப் பதிவாகிவிட்டது. அது உண்மையல்ல. நானும் உணர்ச்சிவசப்பட்டு, இப்படி வீசி எறியப்பட்ட விருதைக் கொடுக்கலாமே என்று சொல்லியிருப்பேனே தவிர, அதைக் கொடுக்கப் போகிறார் என்று சொல்லவில்லை" என்று தினா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT