Published : 18 Jan 2021 04:54 PM
Last Updated : 18 Jan 2021 04:54 PM
பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளிக்க உள்ளதாக தினா தெரிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா இருவருக்கும் இடையே ஆன மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். டிசம்பர் 28-ம் தேதி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வரவுள்ளார் என்று தகவல் வெளியானது.ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.
அவருடைய வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. பலரும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினரின் இந்த முடிவுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு செய்துள்ளார். இதனை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இது தொடர்பாக தினா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"இசைக் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்தச் சந்திப்பு. இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதி பற்றி ஒரு மாதம் கழித்து உங்களுடன் பேசுகிறோம். பிரசாத் ஸ்டுடியோ இடத்துக்காக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருக்கிறார் என்கிற ஊடகங்களில் வருகிற செய்திகள் தவறானவை.
கடந்த 45 ஆண்டுகளாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ பிரசாத் ஸ்டுடியோ. முதல் நாள் மாலை ரெக்கார்டிங் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றவர், மறுநாள் காலை வழக்கம்போல சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர். இது எட்டு மாத காலமாக நீடித்தது. அதன் காரணமாகவே நீதிமன்ற உதவியை நாடினார்
நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகளாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டுக் குப்பையாகக் குவிக்கப்பட்டிருந்தன
45 ஆண்டு காலம் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப் பணியைச் செய்தவரைக் காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். தமிழ் சினிமாவின் உயரிய அமைப்புகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இசைக் கலைஞர்கள் சங்கம் அல்லது பெப்சி தலைமைக்குத் தகவல் கூறி இருக்கலாம். இப்படி எந்தவிதமான நாகரிகமான நடவடிக்கையை மேற்கொள்ளாத பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அவமானகரமாக வெளியேற்றியதை மத்திய, மாநில அரசுகள் மவுனமாக வேடிக்கை பார்த்தது.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை இசைஞானிக்கு ஏற்பட்டிருக்குமா? நாங்கள் தற்போது பாதுகாப்பற்ற அநாதைகளாக இருப்பதாக உணர்கிறோம். 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண் விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்".
இவ்வாறு தினா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT