Published : 18 Jan 2021 04:06 PM
Last Updated : 18 Jan 2021 04:06 PM
வெறும் பாராட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்று 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரம்யா, ஆண்ட்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சுமார் 11 மாதங்கள் கழித்து ஜனவரி 13-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
ஆனால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் எனத் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்தப் படம் அனைத்து இடங்களிலும் சுமார் 90% திரையரங்குகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
'மாஸ்டர்' படத்தைத் தனது சொந்த ஊரில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
"50% இருக்கைகள் அனுமதிக்கு இடையே, இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. அதற்குப் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தமிழகம் மட்டுமன்றி இதர மாநிலங்களிலிருந்தும் நிறையப் பேர் தொலைபேசியில் பேசினார்கள், குறுந்தகவல் அனுப்பியுள்ளார்கள்.
படத்துக்கு விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அடுத்த படத்தில் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்று பார்க்க வேண்டும். மற்றபடி பெரும்பாலான மக்களுக்குப் படம் பிடித்திருப்பதால் தான் இவ்வளவு கூட்டம் வந்துள்ளது என நினைக்கிறேன். வெறும் பாராட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது.
பலரும் 3 மணி நேரப் படம் குறித்துப் பேசுகிறார்கள். இரண்டு பெரிய நாயகர்கள் என்னும் போது, இருவருக்குமே காட்சிகள் வேண்டும். அதில் நிதானம் வேண்டும் என்று தான் 3 மணி நேரம் வைத்தேன்"
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT