Published : 18 Jan 2021 12:28 PM
Last Updated : 18 Jan 2021 12:28 PM
2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. ஆனால், இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டும் கமலே தொகுப்பாளராக பணிபுரிந்தார்.
இந்த ஆண்டு ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். ஒவ்வொரு வாரத்துக்கு இடையிலும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தார்கள்.
இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இன்று (ஜனவரி 17) இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதலில் சோம், பின்பு ரம்யா பாண்டியன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரியோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்துக்கு ஆரி மற்றும் பாலாஜி இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. அதில் ஆரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஆரி பேசியவதாவது:
வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட இந்த தருணத்தில் முதலில் இருவரிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அது என்னோடு இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் மற்றும் என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்கள். என்னுடைய நடவடிக்கைகள், கருத்துக்கள் உங்களில் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல இந்த நேரத்தில் இருவரின் ஆசிர்வாதத்தை பெற விரும்புகிறேன். இதுவரை நான் எதிலும் முதல் இடம் பெற்றதில்லை. தொடர்ந்து அவமானங்களை மட்டுமே வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். இப்போது முதல்முறையாக முதல் இடத்துக்கான கோப்பை என் கையில் இருக்கிறது. ஆனால் என்னுடைய அம்மா, அப்பா இருவரும் இப்போது என்னுடன் இல்லை.
இந்த நேரத்தில் கமல் சாரிடன் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் ‘தப்புன்னா தட்டிக் கேப்பேன்.. நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன்’ என்று சொல்வீர்கள். அதே போல தவறு என்றால் ‘தட்டிக் கேள், நியாயத்துக்கு நிமிர்ந்து கேள்வி கேள்’. இதுதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு நீங்கள் தான் காரணம். இந்த வெற்றியை அடைந்த பிறகு பொறுப்பு கூடப் போகிறது என்று கமல் சார் சொன்னார். சாகும் வரையில் இந்த வெற்றிக்கு பொறுப்புள்ளவனாக இருப்பேன்.
இவ்வாறு ஆரி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT