Last Updated : 16 Jan, 2021 06:32 PM

1  

Published : 16 Jan 2021 06:32 PM
Last Updated : 16 Jan 2021 06:32 PM

இந்தியில் மவுனப் படம்: நாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம்

மும்பை

இந்தியில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்திலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 2021-ம் ஆண்டு அதிகப் படங்கள் வெளியாகும் நாயகனாக விஜய் சேதுபதி இருப்பார் எனத் தெரிகிறது. இன்று (ஜனவரி 16) அவரது பிறந்த நாளாகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலகினர் விஜய் சேதுபதிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள புதிய இந்திப் படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கவுள்ளார். 'காந்தி டாக்ஸ்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் மவுனப் படமாகும். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் திரையுலகில் தயாராகும் மவுனத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே இந்தியில் கடைசியாக உருவான மவுனப் படமாகும்.

'காந்தி டாக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தது குறித்து கிஷோர் கூறியிருப்பதாவது:

"இந்தப் படம் உணர்ச்சிரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர்தான். தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக்கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்துகொண்டார்.

ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத்துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றித் தெரியவந்தது.

அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன்தான் என் கதையின் நாயகன் கிடைத்துவிட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோடு பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்"

இவ்வாறு இயக்குநர் கிஷோர் தெரிவித்துள்ளார்.

'காந்தி டாக்ஸ்' படத்தை மூவி மில் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தவிர்த்து இந்தியில் 'மாநகரம்' இந்தி ரீமேக்கான 'மும்பைகர்', 'அந்தாதூன்' இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவுள்ள அடுத்த படம் மற்றும் ஷாகித் கபூர் நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x