Published : 14 Jan 2021 06:14 PM
Last Updated : 14 Jan 2021 06:14 PM

'மாஸ்டர்' படக்குழுவினருக்கு அமெரிக்கத் திரையரங்க நிர்வாகங்கள் நன்றி

சென்னை

ஓடிடி வெளியீட்டைத் தவிர்த்து திரையரங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் 'மாஸ்டர்' படக்குழுவினருக்கு அமெரிக்கத் திரையரங்க நிர்வாகங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மாஸ்டர்'. நேற்று (ஜனவரி 13) இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே 'மாஸ்டர்' வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

இந்த நிறுவனம்தான் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. வெளிநாடுகளில் கிடைத்த வரவேற்பு குறித்து ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான விவேக் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:

"இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்கா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது 'மாஸ்டர்'.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் சர்ச்சை, கரோனா அச்சுறுத்தல் எனப் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் கலிபோர்னியா மாகாணத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதர மாகாணங்களில் மட்டுமே 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டோம். அங்கும் எங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். விஜய் என்றாலே அனைவருக்கும் தெரிந்துள்ளது.

குறிப்பாக, மாஸ்டர்' படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குப் பொக்கிஷமாகப் படம் கொடுத்து உதவி புரிந்தமைக்கு நன்றி. இந்தச் சிக்கலான காலகட்டத்தில் இவ்வளவு காலம் காத்திருந்து திரையரங்க வெளியீட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளதற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், 'வொண்டர் வுமன்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களே திரையரங்குகளில் வெளியான அன்று ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது. அப்படி எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், திரையரங்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ள 'மாஸ்டர்' படக்குழுவினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்காக 'மாஸ்டர்' படத்துக்கு எங்களது ஆதரவு உண்டு என்று சுமார் 90% திரையரங்குகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

அமெரிக்காவில் 30% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அங்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது 'மாஸ்டர்'. எங்களது ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வைத்து திரையரங்குகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் எந்தவொரு தென்னிந்தியப் படமும் பண்ணாத முதல் நாள் வசூலைச் செய்துள்ளது. அதிலும் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளதால் நாங்கள் கூடுதல் உற்சாகமாகியுள்ளோம்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் விஜய் படம் என்றவுடன் உற்சாகமாகிவிட்டார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுமார் 90% திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகியுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து திரையரங்குகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால், இதுவரை இவ்வளவு திரையரங்குகளில் எந்தவொரு தமிழ்ப் படமும் வெளியானதில்லை. அந்த முயற்சி ஹம்சினி எண்டர்டையிமெண்ட் நிறுவனத்தால் சாத்தியமாகியுள்ளதில் மகிழ்ச்சி.

எங்களது ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு வெளிநாட்டு உரிமையை வழங்கிய லலித் குமாருக்கு நன்றி".

இவ்வாறு விவேக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x