Published : 12 Jan 2021 11:23 AM
Last Updated : 12 Jan 2021 11:23 AM
மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களோடு பணிபுரிய விரும்புகிறேன் என இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனெட்’ திரைப்பட வெளியீடு கரோனா நெருக்கடியால் பல முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. மேலும், இதில் பிரபல பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து கிறிஸ்டோபர் நோலன் பகிர்ந்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:
''நீண்டகாலத் திட்டங்களை நான் வகுப்பதில்லை. ஆனால், இந்தியாவில் எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது. நிச்சயமாக நான் மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களோடு பணிபுரிய விரும்புகிறேன். நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.
மும்பையில் உள்ள இயக்குநர்களையும் சந்தித்த அனுபவமும், மும்பையின் காட்சிகளும், ஒலிகளும் எனக்கு மிகச்சிறந்த ஊக்கமாக அமைந்தன. மீண்டும் அங்கு திரும்பிச் சென்று எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதற்கான கற்பனையை அது உடனடியாக என்னுள் விதைக்கிறது.
இப்படம் உலகம் முழுவதும் படமாக்கப்பட்டது. ஆனால், படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் மும்பையில்தான் படமாக்கப்பட்டன. அங்கு எனக்குக் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது. அந்த நகரத்து மக்களின் திரைப்படங்களின் மீதான காதல் நெஞ்சைத் தொடுவதாக உள்ளது''.
இவ்வாறு நோலன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT