Published : 05 Jan 2021 03:40 PM
Last Updated : 05 Jan 2021 03:40 PM
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கமலின் திட்டத்துக்கு கங்கணா ரணாவத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இதில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம் குறித்து கமல் பேசும்போது, "பெண் சக்தி திட்டம், பல முறை நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் ஒன்றுதான். ஆனால், அதைக் கிண்டலடிக்கும் போக்கு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் ‘பெய்ஜிங் அறிவிப்பு’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பெண் சக்தி’ என்கிற திட்டம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தைப் பாராட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், "இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளைச் சம்பளம் பெறத்தக்க பணியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் எண்ணத்தை நான் வரவேற்கிறேன். இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற யோசனையும் வரவேற்கத்தக்கது. இந்த யோசனையால் சமூகத்தில் இல்லத்தரசிகளின் அந்தஸ்தும் சுயாதீன அதிகாரமும் அதிகரிக்கும். மேலும், சர்வதேச அளவில் ஓர் அடிப்படை அளவு ஊதியம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் போக்கினை ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கணா ரணாவத், சசிதரூரின் ட்வீட்டை மேற்கோளிட்டு தனது ட்விட்டர் பதிவில், "எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் கொள்ளும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்குச் சம்பளம் வேண்டாம். எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக வீற்றிருக்க எங்களுக்குச் சம்பளம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாகவும் பார்க்காதீர்கள். மாறாக உங்கள் மனைவியிடம் நேசிக்கும் பெண்ணிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும் பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல" என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரணாவத்.
கங்கணா ரணாவத்தின் கருத்துக்கு ரசிகர் ஒருவர், "எல்லாம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதேவேளையில், இல்லத்தரசிகளின் பணிகளுக்கு அங்கீகாரம், மரியாதையைச் சமூகம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. நீண்ட காலமாக அது கிடப்பில் உள்ளது. வேலைக்குச் செல்லும் ஆண்மகனின் சேவைக்கு நிகராக இல்லத்தரசிகளின் பணி அங்கீகரிக்கப்படுவதில்லை. குடும்பத்தலைவிகள் பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருப்பது வேதனையானது" என்று குறிப்பிட்டார்.
அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கங்கணா ரணாவத், "ஓர் இல்லத்தரசியைச் சம்பளம் பெறும் கூலித் தொழிலாளியாகத் தரம் குறைப்பது அவளது நிலையை இன்னும் மோசமடையவே செய்யும். அவளுடைய அன்புக்கு, தாய்மை நிறைந்த தியாகங்களுக்கு விலைப் பட்டியல் இடுவது கடவுளுக்குக் காசு கொடுக்க நினைப்பதற்குச் சமமானது. இந்த உலகைப் படைக்க இத்தனை மெனக்கெட்ட கடவுள் மீது பரிதாபப்பட்டு சம்பளம் கொடுப்பதும், இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் கொடுக்க நினைப்பதும் சமமானதே. இரண்டுமே வேடிக்கையானது, வேதனையானது" என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரணாவத்.
Don’t put a price tag on sex we have with our love, don’t pay us for mothering our own, we don’t need salary for being the Queens of our own little kingdom our home,stop seeing everything as business. Surrender to your woman she needs all of you not just your love/respect/salary. https://t.co/57PE8UBALM
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT