Published : 04 Jan 2021 03:34 PM
Last Updated : 04 Jan 2021 03:34 PM

திரையரங்குகளில் 100 சதவிதம் அனுமதி: முதல்வர், அமைச்சருக்கு தயாரிப்பாளர் சங்கங்கள் நன்றி

திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்கிற தமிழக அரசின் உத்தரவுக்கு திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கமும்‌, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் நன்றி தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இன்று இடைக்கால அறிவிப்பாக உரிய பாதுகாப்பு நடைமுறைகளைத் திரையரங்குகள் கடைப்பிடித்து 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், இயக்குநர் பாரதிராஜா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoP's) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம்.

திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம் சார்பில் தலைவர் என் ராமசாமியும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "தமிழ்‌ திரையுலகின்‌ அசாதாரண சூழ்நிலையிலிருந்து, தொழில்‌ பாதுகாப்பு அளித்து தக்க தருணத்தில்‌ இந்த அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களுக்கும்‌, மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்நுறை அமைச்சர்‌ அவர்களுக்கும்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ சார்பிலும்‌, தமிழ்த்‌ திரையுலகம்‌ சார்பிலும்‌ எங்கள்‌ கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x