

உங்களுக்குத் திரைப்படத்தில் நடிப்பதற்கோ, இயக்குவதற்கோ விருப்பமுண்டா என்று ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பாடகர் சித் ஸ்ரீராம் பதிலளித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' திரைப்படத்தில் 'அடியே' என்கிற பாடல் பாடியதன் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம்.
தொடர்ந்து இவர் பாடிய 'என்னோடு நீ இருந்தால்', 'தள்ளிப் போகாதே', 'மறுவார்த்தை பேசாதே', 'கண்ணான கண்ணே' உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று சித் ஸ்ரீராமுக்கென ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
மேலும், மணிரத்னம் தயாரித்த 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார் சித் ஸ்ரீராம். தெலுங்கு மொழியிலும் இவர் பாடிய பாடல்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.
அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சித் ஸ்ரீராம் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் 'உங்களுக்குத் திரைப்படங்களில் நடிக்கும் அல்லது இயக்கும் ஆசை உள்ளதா?' என்று கேட்டதற்கு, 'எதிர்காலத்தில் படம் இயக்கும் விருப்பமுண்டு' என்று சித் ஸ்ரீராம் பதிலளித்துள்ளார்.
மேலும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது குரு என்றும், இசையமைப்பாளர் இமான் இனிமையான இசைக் கலைஞர் மற்றும் மனிதர் என்றும், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடுவது எப்போதுமே உற்சாகமான அனுபவம் என்றும் சித் ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
மார்கழி மாதம் நடக்கும் கர்னாடக இசைக் கச்சேரியிலும் சித் ஸ்ரீராம் பாடி வருகிறார். இந்த வருடமும் பாடவுள்ளதாகவும் அதுகுறித்த விவரங்களைப் பகிர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.