Published : 25 Dec 2020 01:40 PM
Last Updated : 25 Dec 2020 01:40 PM
ரத்த அழுத்த அளவில் சீரின்மை இருப்பதால் ஹைதராபாத்தில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
ஆனாலும், சென்னை திரும்பாமல் ஹைதராபாத்தில் ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ரஜினிகாந்த் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சிலருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
22-ம் தேதி ரஜினிகாந்துக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவருக்குக் கோவிட்-19 அறிகுறிகள் இல்லையென்றாலும் அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. மேற்கொண்டு அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.
ரத்த அழுத்த அளவில் சீரின்மை மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன."
இவ்வாறு அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதி அரசியல் கட்சித் தொடக்கம் எப்போது என்ற தேதியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் ரஜினிகாந்த். இந்தச் சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால், பலரும் அவர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT