Published : 24 Dec 2020 02:23 PM
Last Updated : 24 Dec 2020 02:23 PM
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடைய அணியினரே பல்வேறு பதவிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகத் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். 'தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டு நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். தலைவராக டி.ஆர், செயலாளராக ஜே.சதீஷ்குமார், பொருளாளராக கே.ராஜன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் டி.ராஜேந்தர். புதிய சங்கம் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27-ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.
எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.
எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தர் ராஜினாமா செய்திருப்பதைத் தொடர்ந்து, புதிய தலைவரைச் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்று செயலாளர் ஜே.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT