Published : 23 Dec 2020 05:56 PM
Last Updated : 23 Dec 2020 05:56 PM
செல்வராகவன் - தனுஷ் இணையின் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இதை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் அசுரன், கர்ணன் திரைப்படங்களைத் தொடர்ந்து சகோதரர் செல்வராகவன் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். கர்ணன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் குறித்து இயக்குநர் செல்வராகவனே அவ்வபோது தகவல்களை வெளியிட்டு வருகிறார். டிசம்பர் மாத ஆரம்பத்தில் "தனுஷுடன் என்றால் அது எப்போதும் விசேஷமானதுதான்" என்று குறிப்பிட்டு, தான் எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்துடன் ட்வீட் செய்தார் செல்வராகவன். இதன் பிறகே இந்தப் படம் உறுதியாக நடைபெறுகிறது என்பது ரசிகர்களுக்குப் புரிந்தது.
சில நாட்கள் கழித்து, தான் கேமிராவுக்கு பக்கத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு "முதற்கட்டப் பணிகளில்" என்று தெரிவித்திருந்தார் செல்வராகவன். படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருவதாக படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தற்போது இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டையும் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். "8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.
Extremely happy to join hands for 8th time with @thisisysr !! @dhanushkraja
Kalaippuli S Thanu @theVcreations pic.twitter.com/AKWbirnFGF— selvaraghavan (@selvaraghavan) December 23, 2020
முன்னதாக இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. தற்போது அது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணிக்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர்கள் இணையில் வெளியான அத்தனை பாடல்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. செல்வராகவன் படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசைக்கும் பாராட்டு கிடைத்துள்ளது. இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த போது ரசிகர்களே அதிக வருத்தம் கொண்டனர்.
மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை, என் ஜி கே என இவர்கள் இணைந்தது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. தற்போது இந்த புதிய அறிவிப்பும் யுவன் - செல்வராகவன் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT