Last Updated : 23 Dec, 2020 02:07 PM

2  

Published : 23 Dec 2020 02:07 PM
Last Updated : 23 Dec 2020 02:07 PM

நாடகம், சினிமா, சீரியல்... உதாரணச் சிகரம் கே.பி!  - கே.பாலசந்தர் நினைவுதினம் இன்று


’டைரக்‌ஷன் டச்’ என்றொரு வார்த்தை எப்போதில் இருந்து திரையயுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கத் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இவரின் வருகைக்குப் பிறகுதான், இவரின் படங்களைப் பார்த்துவிட்டுத்தான், இவரின் படக்காட்சிகளையும் வசனங்களையும் கொண்டுதான் ‘டைரக்‌ஷன் டச்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. அந்த ‘டைரக்‌ஷன் டச்’சில் சிகரம் தொட்ட இயக்குநர்... கே.பாலசந்தர்.

நடிகர்களின் பக்கம் இருந்த ரசிகப் பார்வையை இயக்குநர்களின் பக்கம் திருப்பியதில் இயக்குநர் ஸ்ரீதருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதில் கொஞ்சம் கூட செய்கூலியோ சேதாரமோ இல்லாமல், இன்னும் எல்லை விஸ்தரித்து ‘இது கே.பி. படம்’ எனும் முத்திரையைக் குத்தி பாலசந்தர் படைத்திட்டவை ஏராளம். ‘இது ஸ்ரீதர் படம்’ என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். அதேபோல், அந்தப் பாதையில் தனித்துவத்துடன் இன்னும் கூடுதல் அழகையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வசனங்களிலும் காட்சிகளிலும் வைத்து நகாசு பண்ணினார் கே.பாலசந்தர்.

திருவாரூர் பக்கமுள்ள நன்னிலம் எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். ஒரு பக்கம் அரசு வேலை, இன்னொரு பக்கம் நாடகம் என்று இயங்கிக் கொண்டிருந்தார். நாடகத்திலும் தனித்துவம் காட்டினார். நாடகத்திலேயே பல புதுமைகள் செய்தார். சினிமாவில் பல மரபுகளை எந்த அலட்டலும் கர்வமுமில்லாமல் சாதித்துக் காட்டினார்.

அடுத்து சினிமாவின் பக்கம் வந்தார். பிறகு ரசிகர்களின் பக்கம் சென்றார். அதையடுத்து ரசிகர்களும் தமிழ்த் திரையுலகமும் அவரின் பக்கம் சென்றது.
எம்ஜிஆர் நடித்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதினார். பின்னர் சிவாஜி நடித்த ‘எதிரொலி’ படத்தை இயக்கினார். ஆனால் தன் முதல் படத்தின் நாயகனாக, கே.பாலசந்தர் இவர்களை, பெரிய நடிகர்களின் பக்கம் வரவில்லை. நாகேஷை நாயகனாக்கினார். படம் முழுக்க மருத்துவமனையைக் கதைக்களமாக்கியிருப்பார் பாலச்சந்தர். அதேபோல், அடுத்தடுத்த கதைகளின் நாயகர்கள் எளிய நடிகர்களாகவே இருந்தார்கள். நாகேஷையும் சுந்தர்ராஜனையும் கொண்டு உருவாக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முன்னதாக இதே ஏவி.எம். தயாரிக்க இவரின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கத்தில், ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகி அதுவும் பெயரைப் பெற்றுத் தந்தது.

பாலசந்தர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்று எல்லைக் கோடுகளெல்லாம் கிழிக்கமுடியாது. ’நீர்க்குமிழி’ மாதிரி சோகம் பிழியக் கொடுப்பார். ‘நாணல்’ மாதிரி திடுக்கிட வைப்பார். ‘பாமா விஜயம்’ மாதிரி சிரிக்கச் செய்வார். ’அனுபவி ராஜா அனுபவி’யில் இரண்டு நாகேஷைக் கொண்டு இன்னும் வெடிச்சிரிப்பு மூட்டினார்.
பாலசந்தர் இயக்கத்தில், ஓடிய படங்கள் ஓடாத படங்கள் என்றிருக்கலாம். நல்லபடம், சரியில்லாத படம் என்றிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும், அதில் ‘பாலசந்தர் படம்’ என்று சொல்லுவதற்கான விஷயங்களை ஆங்காங்கே தூவியிருப்பார். அதை இன்றைக்கும் சொல்லிச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
நாடகத்தைத் தொடங்கும் போது, கடவுள் வாழ்த்து போடுவார்கள். பிறகுதான் நாடகம் ஆரம்பமாகும். ஆனால் தன்னுடைய நாடகங்களை திருக்குறளில் இருந்து தொடங்குவதுதான் பாலசந்தரின் வழக்கம். இதுவே பின்னாளில், திரையிலும் எதிரொலித்தது. படத்தை எந்தக் கம்பெனி தயாரித்தாலும் பாலசந்தர் இயக்கிய படங்களில் மட்டும், திருவள்ளுவர் வந்துவிடுவார். ‘அகர முதல எழுத்தெல்லாம்...’ குறளும் குரலும் ஒலித்துவிடும். பின்னர், ‘கவிதாலயா’வின் லோகோவாகவும் திகழ்ந்தார் திருவள்ளுவர். .

எம்ஜிஆரும் சிவாஜியும் முன்னணியில் இருந்த நேரத்தில், முதல் படத்தை இயக்கினார். அதன் நாயகன் நாகேஷ். டிராமா காலத்துப் பழக்கம்; வாடா போடா பழக்கம். பின்னர் எத்தனையோ படங்களில் நாகேஷுக்கு கேரக்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார். நாகேஷ் உடம்புக்குள் பாலசந்தரும் அவரின் புத்திக்குள் நாகேஷும் ஊடுருவியிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். பின்னர் எம்ஜிஆர் சிவாஜியின் பக்கம் செல்லாமல், எம்ஜிஆர் சிவாஜிக்கு அடுத்த கட்டமாக அந்த ஸ்தானத்துக்கு நடிகர்களாக கமல், ரஜினியைக் கொண்டு வந்தார்.

மருத்துவமனைக்குள்ளேயே இருக்கும் ‘நீர்க்குமிழி’. அதேபோல், ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’ ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் வெரைட்டி காட்டியிருப்பார். முதல் படம் பண்ணுகிற காலகட்டத்தில், எம்.எஸ்.வி.யும் கே.வி.மகாதேவனும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தன் முதல் படத்தில், தன்னுடைய நாடகத்தில் இசையமைத்து வந்த வி.குமாரை இசையமைப்பாளராக ‘நீர்க்குமிழி’யில் அறிமுகம் செய்தார்.

தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, நாகேஷ் போல் அடுத்து அவர் தேர்வு செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜனுக்கு முன்னே ‘மேஜர்’ எனும் அடைமொழிக்குக் காரணமே பாலசந்தர்தான். ‘மேஜர் சந்திரகாந்த்’ படமும் பாத்திர வார்ப்புகளும் புது தினுசு என்று இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல, ஜெமினி கணேசனை பலவிதமாகப் பயன்படுத்தினார். ‘வெள்ளி விழா’, ‘தாமரை நெஞ்சம்’, ‘காவியத்தலைவி’, ‘புன்னகை’, ;பூவாதலையா’, ‘நான் அவனில்லை’ என எத்தனையோ படங்கள். வாணிஸ்ரீ, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சரோஜாதேவி என பலருக்கும் இன்று வரை சொல்லும்படியான கேரக்டர்கள் அளித்தார்.

’அனுபவி ராஜா அனுபவி’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’ என்று ஒரு பக்கம் காமெடிப் படமும் ‘நாணல்’ , ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நூற்றுக்கு நூறு’ என த்ரில்லிங் படங்களும் குடும்பத்துக்குள் நிலவுகிற குழப்பங்களையும் நேர்மையும் வாய்மையும் கொண்ட வாழ்க்கையையும் பாலசந்தர் படங்களில் வெளிப்படுத்தியதே வேறு மாதிரியானவை. ‘இப்படிக் கூட படம் பண்ணமுடியுமா?’ என்று ‘புன்னகை’ படத்தையும் அந்த ‘சத்யா’ கேரக்டரையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்.

’அரங்கேற்றம்’ பிரமீளா, ’அபூர்வ ராகங்கள்’ ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நூல்வேலி’களில் சுஜாதா, ‘மூன்று முடிச்சு’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ஸ்ரீதேவி, ‘மரோசரித்ரா’, ‘தப்புத்தாளங்கள்’, ‘நூல்வேலி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அக்னி சாட்சி’ சரிதா, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா,‘நூற்றுக்கு நூறு’ லட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயலலிதா, ‘எதிர்நீச்சல்’ ஜெயந்தி என இன்னும் எத்தனையோ படங்களில் பெண் கதாபாத்திரங்கள் ஒளிரும்; மிளிரும். இதைக் கொண்டே பி.ஹெச்டி செய்யலாம். தமிழ்த் திரையுலகில், பெண்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தியது அநேகமாக பாலசந்தராகத்தான் இருக்கும்.

பாலசந்தரின் படமும் கதையும் கதாபாத்திரங்களும் ஒரு நாவலைப் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். கதை சொல்லவேண்டியதை, காட்சிகள் சொல்லவேண்டும். காட்சிகள் உணர்த்த வேண்டியதை வசனம் சொல்லவேண்டும், வசனம் சொல்லவேண்டியதை ஒரு பாடலே சொல்லிவிடவேண்டும். சில சமயங்களில், மெளனத்தையும் இசையையும் கொண்டு கூட உணர்வுகளைச் சொல்லிவிடுவார் பாலசந்தர். ஒரு காட்சியை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஆரம்ப - இறுதிக்கு நடுவேயும் நகாசு பண்ணிக் கொண்டே இருப்பார். இவையெல்லாம் ‘பாலசந்தர் டச்’ என்று பிரமிக்கவும் ரசிக்கவும் வைத்தன.

நாகேஷ் ஹிட் லிஸ்ட்டில் பாலசந்தர் வந்துவிடுவார். ஜெமினிக்கும் அப்படித்தான். ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகியோர் படங்களின் வரிசையில் பாலசந்தர் படங்களுக்கு முதலிடம் இருக்கும். இப்படி எத்தனையெத்தனை நடிகர்களுக்கோ முகமும் புதிய முகவரியும் கொடுத்தவர் பாலசந்தர். நாகேஷை வைத்து 36 படங்களுக்கும் மேல் இயக்கினார். கமலை வைத்து 30 படங்களுக்கு மேல் இயக்கினார். ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஜெயந்தி, சரிதா, கீதா, ஜெயப்ரதா, சுமித்ரா, ஷோபா என நடிகைகளை நடிக்கப் பயன்படுத்துகிற அளவுக்கு பலம் கொண்ட கேரக்டர்களை வழங்கினார். இன்று வரைக்கும் தமிழ் சினிமாவில், நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கியவர் பாலசந்தர் அளவுக்கு வேறு எவருமில்லை! .

தமிழ் சினிமாவில் அதிக அளவில் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தது பாலசந்தராகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்டவர்களை அறிமுகப்படுத்தி, இதில் முக்கால்வாசிபேரை நம் மனதில் நிற்கவைத்தும் சாதித்தவர் பாலசந்தர்.

தன்னைச் சுற்றியுள்ள கலைஞர்களை அற்புதமாகப் பயன்படுத்துவார். எம்.எஸ்.வி.யின் மிகச்சிறந்த இசையை தன் படங்களுக்குள் இணைத்திருக்கிறார். ‘எத்தனையோ இயக்குநர்களின் படங்களுக்கு பாட்டு எழுதியிருக்கிறேன். பாலசந்தருக்கு பாட்டு எழுதுவதுதான் சிரமமாக இருக்கும். ஒரு பாட்டுக்குள் படத்தின் ஜீவன் மொத்தத்தையும் சொல்லச் சொல்லுவார்’ என்று தெரிவித்துள்ளார் கவியரசு கண்ணதாசன். இசையைப் போலவே பாடல்களும் தனியிடம் பிடித்தன.

‘தெய்வம் தந்த வீடு’ ஒரு மாதிரி. ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ இன்னொரு மாதிரி. ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலும் ‘கேள்வியின் நாயகனே’வும் புதுவிதம். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’, ‘இலக்கணம் மாறுமோ’, ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’, ‘ஓடுகிற தண்ணியில’, ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’, ‘ஆண்டவனின் தோட்டத்திலே’, ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ , ‘பூமாலை வாங்கி வந்தால்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’, ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’, ‘காதோடுதான்’... என்று இன்னும் இன்னுமாகச் சொல்லிக் கொண்டே போக பாடல்கள் வரிசைகட்டி நிற்கின்றன.’

‘ஆடி வெள்ளி தேடி உன்னை’ பாடல் இன்றைக்கும் இதம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் இந்திப் பாடலைத் தந்திருப்பார். ’மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்’ பாடலும் ‘அழகன்’ படத்தில் இரவு முடிந்து விடியும் வரைக்கும் பாடுகிற பாடலும் ரேடியோவில் பாடுவது போல் பாவனை செய்து பாடுகிற ‘மேஜர் சந்திரகாந்த்’ பாடலும் என காட்சிகளிலும் நகாசு பண்ணுகிற வித்தை... பாலசந்ந்தரின் புதுமைகள், அதீத முயற்சிகள்.

’அவர்கள்’ பொம்மை, அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!‘அச்சமில்லை அச்சமில்லை’ அருவி, விசாகப்பட்டினம் கடற்கரை, ‘அழகன்’ டெலிபோன், இளையராஜா அறிமுகமாகி பரபரப்பு கிளப்பிய வேளையில் எம்.எஸ்.வி.யுடன் கைகோர்த்துக் கொடுத்த தேனிசை மழையான ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘உன்னால் முடியும் தம்பி’யின் கமல் அண்ணன், தோட்டக்கார தாத்தா, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா, ‘புதுப்புது அர்த்தங்கள்’ பூர்ணம் விஸ்வநாதன் - செளகார் ஜானகி, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ திலீப் எனும் கேரக்டர்... என செல்லுலாய்டில் பாலசந்தர் செய்த மாயாஜாலங்கள்... அவரின் கற்பனைக்குள் ஒளிந்திருந்த யதார்த்த வெளிப்பாடுகள்.
இன்னும் இருக்கின்றன.

‘அரங்கேற்றம்’ டால்டா டப்பாவுடன் திரியும் மனப்பிறழ்வுப் பெண், ‘மூன்று முடிச்சு’ மனசாட்சி, ‘எதிர்நீச்சல்’ இருமல் தாத்தா என்று இவர் கேரக்டர்கள் நம்மை ஏதோ செய்யும். எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும். இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!

பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார். ’எதிர்நீச்சல்’ படத்தில் இருமல் தாத்தா, ’அவர்கள்’ பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.

ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி. தேங்காய் சீனிவாசனுக்கு ‘தில்லுமுல்லு’ ஒன்று போதும்... இன்னும் நூறாண்டு கழித்தும் அவரின் கேரக்டர் பேசும். பேசுபொருளாக இருக்கும்.
எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.

அவள் ஒரு தொடர்கதையில், ‘பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.

நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.

காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.

தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப் எனும் கேரக்டரே இல்லாத கேரக்டர் என எல்லாமே பாலசந்தரின் பரீட்சார்த்த முயற்சிகள்; வெற்றிகள்; புதுமைகள்.

வி.குமார், எம்.எஸ்.வி., இளையராஜா, வி.நரசிம்மன், மரகதமணி என்றும் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்றும் இசைக்கும் பாட்டுக்குமாக அப்டேட்டாகிக் கொண்டே இருந்தார். ஒரு பக்கம் அனந்துவும் இன்னொரு பக்கம் ரகுநாத ரெட்டியும் துணை நின்றார்கள்.

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தார். சினிமாவில் பரபரவென இருக்கும் போதே ‘மின்பிம்பங்கள்’ உருவாக்கி, தொலைக்காட்சி சீரியல்களுக்குள் இறங்கினார். ஒரு சீரியல் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இவரின் சீரியல்கள் பலவும் ஆகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன என்பார்கள்.

நாடகம், சினிமா, தொலைக்காட்சி என்பவை மட்டுமின்றி, இயல்பு வாழ்விலும் உதாரண புருஷராகத் திகழ்ந்த கே.பி. சரித்திர ஆச்சரியம்!

இன்று (23ம் தேதி) கே.பாலசந்தர் நினைவுதினம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x