Published : 18 Dec 2020 09:05 AM
Last Updated : 18 Dec 2020 09:05 AM
பிரபல மலையாள நடிகை அன்னா பென். ‘கும்பலாங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’,‘கப்பேலா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நேற்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தும் வழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை என்னால் எளிதில் அப்படியே விட்டுவிட முடியவில்லை. ஒரு சூப்பர்மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் ஒரு குறைவாக இருந்த ஒரு இடத்தில் இரு ஆண்கள் என்னை கடந்து சென்றனர். அதில் ஒருவர் என்னை கடந்து செல்லும்போது வேண்டுமென்றே என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார். அந்த தருணம் எனக்கு மிகுந்து அதிர்ச்சியை கொடுத்ததால் என்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. ஆனால் அவர் வேண்டுமென்றே செய்தாரா என்று அப்போது உறுதியாக தெரியவில்லை. எனினும் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்றால் நம்மால் அதை உணர முடியும். ஆனால் என்னிடமிருந்து சற்று தொலைவில் இருந்த என் சகோதரி இதை தெளிவாக பார்த்திருக்கிறார். அவர் என்னிடம் வந்து நான் சரியாக இருக்கிறேனா என்று கேட்டார். என்னால் எதையும் யோசிக்க கூட முடியவில்லை. நான் அவர்களை நோக்கி சென்ற போது அவர்கள் என்னை முற்றிலுமாக தவிர்த்தனர். அவர்கள் செய்தது எனக்கு தெரிந்துவிட்டது என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்.
அவர்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து நழுவி விட்டனர். அப்போதும் நான் மிகுந்து கோபத்துடன் இருந்தேன். ஏனெனில் அந்த தருணத்தில் என்னால் அவர்களை எதுவுமே சொல்லமுடியவில்லை. நானும் என் சகோதரியும் அங்கிருந்து கிள்ம்பி என் தாயும் சகோதரரும் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றோம். அந்த நபர்கள் இருவரும் வெளிப்படையாக எங்களை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் எங்கள் அருகில் வந்து பேச முயற்சி செய்தனர். நான் நடித்த படங்களின் பெயரை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினர். நாங்கள் அவர்களுக்கு முகம் கொடுக்க வில்லை. தூரத்துல் என் அம்மா வந்து கொண்டிருப்பதை கண்ட அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டனர்.
இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடம் நான் சொல்லிருக்க வேண்டிய ஆயிரம் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் நான் சொல்லவில்லை. என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு சிறிய நிம்மதிக்காக இதை இங்கே பகிர்கிறேன். அவர்கள் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி நடந்து சென்றதும், அதை பார்த்தும் என்னால் எதுவும் செய்யமுடியாமல் இருந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. இது எனக்கு முதல் முறை இல்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும், கடினமாகவும் இருக்கின்றது.
பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது, குனியும் போதும் நிமிரும்போதும் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் பட்டியல் நீள்கிறது. வீட்டில் இருக்கும்போது வெளியே செல்லும் என் அம்மா, தங்கை, தோழிகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது. காரணம் இது போன்ற மோசமான ஆண்கள்.
இதைப் படித்துக் கொண்டிருக்கும் பெண்கள், இது போன்ற ஆண்களின் முகத்தில் ஓங்கி அறைவிடுவதற்கான எனக்கில்லாத அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT