Published : 16 Dec 2020 06:44 PM
Last Updated : 16 Dec 2020 06:44 PM
'மிஷன் இம்பாஸிபிள் 7' படப்பிடிப்பில் கோவிட்-19 கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குழு உறுப்பினர்களை நடிகர் டாம் க்ரூஸ் கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார். இது தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டனில் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டு 'மிஷன் இம்பாஸிபிள் 7' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கணிணி திரையைப் பார்க்க, இடைவெளியைப் பின்பற்றாமல் ஒன்றாகக் கூடிய படக்குழுவினர் சிலரை டாம் க்ரூஸ் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து குழுவினர் அனைவருக்கும் க்ரூஸ் அனுப்பியுள்ள ஆடியோ கசிந்துள்ளது.
"இதுபோன்ற விதிமீறலை நான் மீண்டும் எப்போதும் எங்கும் பார்க்கக் கூடாது. விதிமுறைகளை நீங்கள் பின்பற்றவில்லையென்றால் உங்கள் வேலை போகும். இங்கிருந்து துரத்தப்படுவீர்கள்.
படப்பிடிப்பைப் பாதுகாப்பாக நடத்துவது எப்படி என்று நாம்தான் ஒரு தரத்தை உருவாக்கியுள்ளோம். நாம் செய்து காட்டிய வழிமுறையை வைத்துதான் ஹாலிவுட்டில் தற்போது திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏனென்றால் அவர்கள் நாம் செய்வதை, நம்மை நம்புகின்றனர்.
நான் ஒவ்வொரு நாள் இரவும் பல தயாரிப்பு நிறுவனங்களுடன், காப்பீட்டு நிறுவனங்களுடன், தயாரிப்பாளர்களுடன் பேசி வருகிறேன். அவர்கள் நம்மை எடுத்துக்காட்டாகப் பார்க்கிறார்கள். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.
நமது துறை முடங்கியதால் வேலையிழந்த மக்களிடம் போய் பேசுங்கள். வேலையின்றி அவர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாது, சாப்பாடு கிடைக்காது. இந்த நினைப்பில்தான், துறையின் எதிர்காலத்தை நினைத்துதான் நான் தினமும் உறங்குகிறேன்.
எனவே நான் நீங்கள் கேட்கும் மன்னிப்பையெல்லாம் கடந்தவன். ஏற்கெனவே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். இப்போது அதைக் கண்டிப்புடன் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்கிறேன். இதை நீங்கள் செய்யவில்லையென்றால் வெளியேற்றப்படுவீர்கள். உங்களால் இந்தப் படத்தை நாங்கள் நிறுத்த முடியாது. புரிகிறதா? மீண்டும் இப்படி ஒரு விஷயத்தை நான் பார்த்தால் நீங்கள் அவ்வளவுதான்.
நான் சொல்வது தெளிவாகப் புரிகிறதா? எனக்கு என்ன வேண்டும் என்று புரிகிறதா? எனக்கிருக்கும் பொறுப்பு புரிகிறதா? நான் உங்கள் காரணத்தை ஏற்றுக்கொள்வேன். ஆனால் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் தர்க்கத்தை ஏற்க முடியாது. நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவீர்கள். அவ்வளவுதான். இனி ஒழுங்காக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று டாம் க்ரூஸ் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.
கோவிட் நெருக்கடியால் முதலில் பாதிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'மிஷன் இம்பாசிபிள் 7’. இதில் நாயகனான டாம் க்ரூஸ் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். பல மாதங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டு, பின் படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்த பிறகு லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் ஒரு தனி கிராமத்தையே உருவாக்கி, படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். எனவே டாம் க்ரூஸ் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை, படப்பிடிப்புத் தளத்தில் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து எச்சரித்துள்ளார்.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT