Published : 15 Dec 2020 01:59 PM
Last Updated : 15 Dec 2020 01:59 PM
சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்துத் தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்றைய தினம் சித்ராவுடன் நடித்த சின்னத்திரை பிரபலங்கள், அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள். முதற்கட்ட விசாரணையில் சித்ராவும், ஹேம்நாத்தும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டது உறுதியானது.
மேலும், படப்பிடிப்பில் சித்ரா இருக்கும்போது ஹேம்நாத் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தைப் பிரிந்துவிடும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சித்ரா தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது.
சித்ராவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஹேம்நாத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டிய புகாரில் நசரத்பேட்டை காவல்துறையினர் ஹேம்நாத்தை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹேம்நாத்திடம் நடைபெற்ற விசாரணையில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கு சித்ரா கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால் சித்ராவுக்குக் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், தனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்திலுமே சித்ரா ஓய்வின்றி நடிக்கத் தொடங்கியுள்ளார்.
ஒருபுறம் கடன் பிரச்சினையால் மன அழுத்தம் ஏற்பட்டபோது, இன்னொரு புறம் திருமணத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. பிரம்மாண்டமாகத் திருமணத்தை நடத்த வேண்டும், திரையுலகினரை அழைக்க வேண்டும் என்றெல்லாம் சித்ரா திட்டமிட்டுள்ளார். அதற்குக் கணவரிடமிருந்து எந்தவொரு உதவியுமே கிடைக்காதபோது மன அழுத்தம் அதிகமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சித்ரா நடிக்க வேண்டாம் என ஹேம்நாத் வற்புறுத்தி சண்டை போட்டுள்ளார். மேலும், டிவி தொடரில் தொடர்ச்சியாக ஆண்களோடு நடித்து வந்ததும் ஹேம்நாத்துக்குப் பிடிக்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக ஹேம்நாத் - சித்ரா சண்டையிட்டு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார் சித்ரா. பின்பு அதிலிருந்து மீண்டுள்ளார்.
தொடர்ச்சியாகக் கடன் பிரச்சினை, கணவர் பிரச்சினை என மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் சித்ரா. கடைசியாக மீண்டும் ஹேம்நாத் - சித்ரா இருவருக்கும் படப்பிடிப்புத் தளத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. பின்னர் ஹோட்டல் அறைக்கு வந்த பின்னரும் வாக்குவாதம் முற்றியிருந்தது. நான் உங்களை நம்பியே இருப்பதாக சித்ரா கூறியதற்கு, ஹேம்நாத் திட்டிவிட்டு அறையை விட்டுச் சென்றுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்திலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT