Published : 15 Dec 2020 12:14 PM
Last Updated : 15 Dec 2020 12:14 PM
நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், கவுதம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் 'ஜெர்சி'. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது. உடனடியாக மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகளும் தொடங்கின.
இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூர் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அது குறித்து ஷாஹித் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘ஜெர்ஸி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. கரோனா காலத்தில் 47 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதை நம்பமுடியவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவினரையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு அற்புதமே அன்றி வேறில்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து தான் நேசிக்கும் ஒரு வேலையை செய்த படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
கதை சொல்லல் என்பது இதயத்தை தொட்டு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்று. ‘ஜெர்ஸி’ படத்தின் கதை சாம்பலில் இருந்து மீண்டெழும் ஒரு பீனிக்ஸ் பறவையின் கதையை சொல்கிறது.
இவ்வாறு ஷாஹித் கபூர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' திரைப்படத்தில் ஷாகித் கபூர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT