Published : 14 Dec 2020 12:06 PM
Last Updated : 14 Dec 2020 12:06 PM
டிசி சூப்பர் ஹீரோவான 'ப்ளாக் ஆடம்' திரைப்படத்துக்காகத் தான் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைப் பற்றி நடிகர் ட்வைன் 'ராக்' ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
48 வயதான நடிகர் ட்வைன் ஜான்ஸன் முன்னாள் பொழுதுபோக்கு மல்யுத்த வீரர். அதில் கிடைத்த புகழின் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். அடுத்ததாக டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான 'ப்ளாக் ஆடம்' பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தன் உடலை இன்னும் முறுக்கேற்றி வருகிறார் ஜான்சன்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், "ப்ளாக் ஆடமுக்கான இரண்டாவது கட்டப் பயிற்சி. டிசி உலகின் அதிகாரப் படிநிலை மாறப்போகிறது.
நீண்ட காலமாக எனக்குப் பயிற்சியாளராக இருக்கும் டேவ் ரின்ஸியைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். அவர்தான் பல மாதங்களாக, வாரங்களாக, ஒவ்வொரு நாளும் இந்தக் கதாபாத்திர வடிவமைப்பில் திட்டமிட்டு வெற்றிக்கு வழி நடத்துபவர்.
125 கிலோ எடை கொண்ட மோசமான ப்ளாக் ஆடம். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் ப்ளாக் ஆடம் என்கிற பெயர் போடப்பட்டிருக்கும் டி-சர்ட்டை ஜான்சன் அணிந்துள்ளார். ஏற்கெனவே வெளியான 'ஷஸாம்' என்கிற சூப்பர் ஹீரோ திரைப்படத்திலிருந்து ஒரு கதாபாத்திரத்தை வைத்து உருவாகும் கிளைக் கதையே 'ப்ளாக் ஆடம்'.
கடந்த 10 வருடங்களாக 'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தை வைத்து திரைப்படம் எடுக்க ஜான்சன் முயன்று வந்தார். தற்போது வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஜான்ஸன் நடித்துள்ள 'ஜங்கிள் க்ரூஸ்' படத்தை இயக்கியிருக்கும் ஆமே காலெட் செரா இயக்குகிறார்.
முன்னதாக, டிசம்பர் 22, 2021ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று வார்னர் பிரதர்ஸ் தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா நெருக்கடி காரணமாகப் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிப் போனதால் இப்போதைக்கு படத்தின் வெளியீட்டை தயாரிப்புத் தரப்பு திட்டமிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT